‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’ – டிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல்

495 0

கிம் ஜாங் அன் தோற்றத்தை விமர்சித்த டிரம்ப் கொடூரமான குற்றவாளி என்பதையும், கொரிய மக்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது சமீபத்திய ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தை வடகொரியாவுக்கு எதிராக ஆதரவு திரட்டுகிற பயணமாக அமைத்துக்கொண்டார். அந்த நாட்டை அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை கைவிடச்செய்வதில் அவர் உறுதியாக உள்ளார்.

இந்த பயணத்தின்போது வியட்நாமில் வைத்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தன்னை முதியவர் என்று விமர்சிக்கிறாரே என ஆதங்கம் தெரிவித்தவர், அதே பதிவில் அவரை குள்ளமானவர், குண்டர் என விமர்சித்தார்.

இது வடகொரியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டின் ஆளுங்கட்சி பத்திரிகை ‘ரோடாங் சின்முன்’ இதுபற்றி தலையங்க கட்டுரை எழுதி உள்ளது. டிரம்பை பலவாறு சாடி உள்ளது.

அதில், “வடகொரியாவின் மாபெரும் தலைமையின் கவுரவத்துக்கு இழுக்கு சேர்க்கிற வகையில் விமர்சித்த குற்றம், மன்னிக்க முடியாத மோசமான குற்றம். அவர் (டிரம்ப்) கொடூரமான குற்றவாளி என்பதையும், கொரிய மக்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவை பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள் கடவுள் நிலையில் வைத்து போற்றப்படுகிறார்கள். கிம் ஜாங் அன்னையும் அப்படித்தான் மக்கள் கருதுகிறார்கள். அப்படி இருக்கிறபோது அந்த உயர்ந்த தலைமை மீது அவமதிப்பை ஏற்படுத்துகிற வகையில் டிரம்ப் கருத்து தெரிவித்திருப்பது ஆளுங்கட்சி வட்டாரங்களில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment