நைஜீரியாவில் 4 தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

304 0

நைஜீரியாவில் ஒரே இடத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடபகுதியில் இஸ்லாமிய தேசம் அமைக்கும் முயற்சியில், கொடூரமான தாக்குதல்களை நடத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு பொதுமக்களையும் கடத்தி கொலை செய்துவருகிறது. மைதுகுரி மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து தற்கொலை தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளை இந்த தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துகிறது.

இந்நிலையில், போர்னோ மாநில தலைநகரான மதுகுரியில் நேற்று 4 தற்கொலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மூனா கரி புறநகர்ப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரும் இறந்தனர்.

இந்த  தாக்குதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போகோ ஹராம் தீவிரவாதிகளை அவர்களின் ஆதிக்க பகுதியில் இருந்து விரட்டியடித்துவிட்டதாக கடந்த ஆண்டு அரசு தெரிவித்தது. ஆனால், அரசுக்கு மீண்டும் சவால் விடும் வகையில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment