தமிழ் தேசிய ஊடகத்துறையினில் ஒரு மைல் கல்லாக கோபு ஜயாவின் பணியும் வாழ்வும் இருந்து வந்திருந்தது!

2548 0

ஈழ தேசத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ,பத்திரிகை ஆசிரியரும் கோபு ஜயாவென அன்புடன் அழைக்கப்படுவருமான எஸ்.எம்.கோபாலரெத்தினம் (எஸ்.எம்.ஜீ) அவர்களது மறைவு தமிழ் ஊடகத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் தேசிய ஊடகத்துறையினில் ஒரு மைல் கல்லாக கோபு ஜயாவின் பணியும் வாழ்வும் இருந்து வந்திருந்தது என்பது அனைவருக்கும் சொல்லித்ததெரிய வேண்டியதொன்றல்லவென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

மறைந்த ஊடகவியலாளர் கோபு ஜயாவிற்கு அஞ்சலித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையினில் தமிழுக்காகவும், தமிழ்த் தேசியத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஊடகப்போராளி எஸ்.எம். கோபாலரத்தினம் ஐயா அரசியல் மற்றும் ஆயுதப்போராட்டத்தின் நீட்சியின் சாட்சியமாக இறுதிவரை இருந்து மடிந்ததொரு ஊடகவியலாளராவார். தனது ஊடக வாழ்வினில் இலங்கை மற்றும் இந்திய அரசுகளால் சிறை வைக்கபட்ட ஊடகவியலாளர்களுள் அவருமொருவராவார்.

ஈழநாடு நாளிதழிலும் பின்னர் புதிய பொலிவுடன் வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையிலும் தனது மகத்தான ஆசிரிய பணியை கோபு ஜயா ஆற்றியிருந்தார். இந்திய அமைதிப்படையால் கைது செய்யப்பட்ட காலத்தினில் அவரால் எழுதப்பட்ட ஈழ மண்ணில் ஓர் இந்திய சிறை என்ற தொடர் இந்திய ஆக்கிரமிப்பு படைகளது அவலத்தை வெளிக்கொணர்ந்த வரலாற்று ஆவணமாக இருந்திருந்தது.

நெருக்கடிகள் மத்தியிலும் சக ஊடகவியலாளர்களது கொலைகள்,கடத்தல்கள்,காணாமல் போதல்கள் மத்தியிலுமேயே கோபு ஜயாவின் பணி அமைந்திருந்தது.அதிலும் ஆட்சியாளர்கள், அவர்களது முகவர்கள் மற்றும் முப்படைகள்,காவல்துறை, ஆயுதக்குழுக்களது அச்சுறுத்தல்கள் மத்தியினில் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதியினில் ஆசிரிய பீட கதிரையிலிருந்து பணியாற்றுவதென்பது வார்;த்தைகளால் சொல்லிவிடக்கூடியதொன்றல்ல.

மறைந்த ஊடகவியலாளர்களான தராகி சிவராம் முதல் நிமலராஜன் ஈறாக வடகிழக்கு முதல் இலங்கை முழுவதும் நட்பையும் அன்பையும் பெற்ற ஒருவராகவே கோபு ஜயாவின் வாழ்க்கை பயணமிருந்தது.

தமிழ் ஊடகத்துறையினில் நடமாடும் ஒரு தகவல் பெட்டகமாகவும் தனது அனுபவங்களை இளம் தரப்புக்களிற்கு கற்றுக்கொடுக்க சளைக்காத ஒருவராகவும் கோபு ஜயா இருந்திருந்தார்.

அன்னாரின் மறைவினால் பிரிவுற்றிருக்கும் குடும்பத்தவர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய யாழ்.ஊடக அமையம் பிரார்த்திக்கின்றதென தெரிவித்துள்ளது.

Leave a comment