நேரு பிறந்தநாள் கொண்டாட்டம்: ஆளுநர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை

334 0

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அருகில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள்.

ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நேருவின் 128-வது பிறந்தநாள் நாடு முழுவதும் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேரு சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.செல்வகுமார், கடம்பூர் ராஜு, பா.பெஞ்சமின், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஐ.டி. சோதனைக்கு எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ‘‘அதிமுகவில் ஒரு பிரிவினரை பலப்படுத்தி பாஜகவுக்கு இழுக்கவே சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தபோது சோதனை நடத்தியிருந்தால் காங்கிரஸ் சார்பில் அதை வரவேற்றிருப்போம்’’ என்றார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நேருவின் உருவப் படத்துக்கு எச்.வசந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

Leave a comment