சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

237 0

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இரு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேகக் கூட்டங்கள் நிலப் பகுதிக்கு வராமல், கடல் பகுதியிலேயே மழையாகப் பெய்துள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் 4 நாட்களாக வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவி வருகிறது. இது, அடுத்து வரும் இரு நாட்களில் வட திசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் மழை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது.

அடுத்து வரும் இரு நாட்களைப் பொருத்தவரை வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில சமயங்களில் மழை அல்லது சற்று பலத்த மழை பெய்யும்.

இதற்கிடையில், திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக எண்ணூரில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சோழவரம், செங்குன்றம், சென்னை விமானநிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் தரமணி ஆகிய இடங்களில் தலா 3 செமீ, திருவள்ளூரில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

Leave a comment