வெள்ளத்தால் குளம்போல் ஆன மயான சாலையில் பிணத்துடன் நீந்தி சென்ற கிராம மக்கள்

238 0

கோடியக்கரை அருகே வெள்ளம் போல் தேங்கியிருந்த தண்ணீரில் கிராமமக்கள் பிணத்தை நீந்தியபடியே பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு சென்றனர். பின்பு சுடுகாட்டிற்கு சென்று தகனம் செய்தனர்.

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் வேதாரண்யம், கோடியக்கரை, நெய்விளக்கு, புஷ்பவனம் உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதேபோல் வடிவாய்க்கால்கள் தூர்ந்து போனதால் சாலைகளில் 4 அடி வரை தண்ணீர் தேங்கி பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கிராமமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 70) என்பவர் நேற்று இறந்து விட்டார். இவரின் உடலை ஊரின் கடைசியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இந்த இடுகாட்டிற்கு முறையான சாலை வசதி இல்லை.

தற்போது பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர். நகரில் இருந்து இடுகாட்டிற்கு செல்லும் சாலையில் சுமார் 400 மீட்டர் இடைவெளியில் முற்றிலும் சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் இடுப்பளவு வரை மழை வெள்ளம் தேங்கியிருந்தது.

அப்போது சுப்பிரமணியன் பிணத்துடன் கிராம மக்கள் புறப்பட்டனர். சிறிது தூரத்தில் சாலையில் வெள்ளம் போல் தேங்கியிருந்த தண்ணீரில் கிராமமக்கள் பிணத்தை நீந்தியபடியே பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு சென்றனர். பின்பு சுடுகாட்டிற்கு சென்று தகனம் செய்தனர்.

ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இச்சாலையில் 400 மீட்டர் சாலையை மட்டும் போடாததாலேயே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட அனைவரும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே இச்சாலையை போர்க்கால் நடவடிக்கையில் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment