தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையும்! – நிலாந்தன்

488 0

இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையப் போகிறது என்று பிரபல அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

சமூக விஞ்ஞான ஆய்வு மையம், இலங்கை ஆசிரியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஆகிய ஆறு பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்திய “இடைக்கால அறிக்கையும் தமிழ்மக்களும்” கருத்தாடல் அரங்கு நேற்று பிற்பகல் யாழ். நல்லூர் நாவலர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ இடைக்கால வரைபைத் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்ற அபிப்பிராயத்தை இந்தத் தேர்தல் மூலம் தெரிவிக்க வேண்டி வரும். எனவே, இந்தத் தேர்தல் தமிழ்மக்களுக்கு ஒரு ஒத்திகையாகவே அமையும். அந்த ஒத்திகை எதிர்காலத்தில் இடம்பெறப் போகும் பல்வேறு மாற்றங்களுக்கும் கட்டியமாகவும் அமையும் .

அடுத்த வருடம் உள்ளுராட்சி சபைத் தேர்தல் என அறிவித்து விட்டார்கள். அந்தத் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால், ஒருவேளை உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றால் அதுவொரு மிகப் பெரிய சவாலான தேர்தலாக அமையும். சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்குமொரு தேர்தலாக மாத்திரம் இந்தத் தேர்தல் அமையப் போவதில்லை. அவ்வாறானதொரு துணிச்சலுடன் தான் அரசாங்கம் தேர்தலை நோக்கி நகருகிறது.

முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவைக் கண்டு அரசாங்கத் தரப்பினர் அச்சப்பட்டார்கள். மகிந்த- மைத்திரியிடையேயான பிளவு மேலும் அதிகரிக்கும் போது அது ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சாதகமாக அமையுமென தற்போது எண்ண ஆரம்பித்துள்ளனர். எனவே, தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகளைப் பெற்று மீண்டுமொரு பெரும்பான்மைக்குப் போகலாமென அவர்கள் நம்புகிறார்கள்.

அந்த அடிப்படையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உடையுமென நம்பித்தான் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சிறிது உற்சாகமாகக் காணப்படுகிறார்கள். சிறீலங்கா சுதந்திரக் கட்சி உடையாதெனத் தெரிந்தால் அவர்கள் தேர்தலுக்கே வரமாட்டார்கள். எனவே, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்மக்கள் எடுக்கும் முடிவே இனப்பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதாக அமையும் எனவும் பிரபல சமூக அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment