மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம்

24254 0

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் புகையிரத நிலையத்தினரின் அசமந்தப்போக்கினால் குடாநாட்டில் பொழியும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

யாழ்ப்பாணம் புகையிரதப் பாதையில் நாவற்குழிப் பகுதியில்  புகையிரத பாதையில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் பொருத்தும் பணிகள் ஒக்டோபர் மாதம் 23ம் திகதிமுதல் ஒரு வாரமாக இடம்பெற்று தொடரூந்துப் பாதை சீரமைக்கப்பட்டு தொடரூந்து சேவைகள் இடம்பெறுகின்றன.

இருப்பினும் குறித்த பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்படவில்லை இதன் காரணத்தினால் நாவற்குழிப் பகுதியில் உள்ள தடுப்புக் கதவுகள் திறக்கப்பட முடியாத நிலமை ஏற்பட்டு தொண்டமனாறு முதல் அச்சுவேலி கோப்பாய் பகுதி வரையான கிராமங்கள் வயல்நிலங்களில் நீர் தேங்கி நின்று பாரிய அழிவினை ஏற்படுத்துகின்றது.

இப் பகுதியில் தேங்கும் நீரை தொன்டமானாறு மற்றும் நாவற்குழுப் பகுதிகளின் ஊடாகவே கடலிற்குத் திருப்புவது வழமை தொண்டமானாறுப் பகுதியில் 18 கதவுகளும் நாவற்குழிப் பகுதியில் 42 கதவுகளும் உள்ளபோதிலும் நாவற்குழுப் பகுதியில் தற்போது 12 கதவுகள் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளன. எஞ்சி 30 கதவுகளையும் திறப்பதாயின் அதிக நீர் ஒரே தடவையில் பாயும்வேளையில் புகையிரத திணைக்களத்தினரால் அகற்றப்படாது இருக்கும் பழைய பாலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்துடன் மோதுண்டு சேதம் ஏற்படுத்தும் பட்சத்தில் புதிய தண்டவாளத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணபாக நாவற்குழுப் பகுதியில் உள்ள எஞ்சிய கதவுகளைத் திறக்கமுடியாத தன்மையே கானப்படுவதாக சுட்டிக்காட்டப்படுவதோடு புகையிரத திணைக்களத்தின் திட்டமிடப்படாத இச் செயலினால் குடாநாட்டின் அதிக பிரதேசம் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதோடு இவ்வாறு நீர் தேங்குவதன் மூலம் அதிக வயல் நிலங்களும் அழிவினைச் சந்திக்கும் என்ற அச்சமும் வெளியிடப்படுகின்றது.

இதேநேரம் கோப்பாய் , அச்சுவேலிப் பகுதி விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் குறுக்காக இருக்கும் பழைய பாலத்தினை அகற்ற புகையிரத திணைக்களம் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது இப் பிரதேசத்தில் அழிவடையும் விவசாய செய்கைக்குரிய நட்ட ஈட்டினை குறித்த திணைக்களமே செலுத்த வேண்டும். என கவலை தெரிவிக்கின்றனர்

Leave a comment