தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையிலோ அல்லது பாதுகாப்பு படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நாராஹேன்பிட்டவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது படையினரின் நடவடிக்கைகளுக்கு பயன்படாத காணிகளை வடக்கு கிழக்கு மக்களுக்கு மீண்டும் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்காலத்தில் அத்தகைய காணிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்களுக்கு எதிராக எந்தவகையான விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை என்பதுடன், படையினரின் கௌரவத்திற்கு பாதிப்பான வகையில் அத்தகைய எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சில அரசியல்வாதிகளின் தேவைக்காக தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் குறித்து சில இராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, யுத்தத்தில் ஈடுபட்ட எந்தவொரு படைவீரருக்கும் யுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக குற்றம் சுமத்தப்படவில்லை என்பதுடன், அவ்வாறு குற்றம் சுமத்த தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

