சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!

398 0

சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த மாதம் தொடங்கிய வட கிழக்கு பருவமழை எதிர்பாராத வகையில் வெளுத்து வாங்கியது. 9 நாட்கள் பெய்த தொடர் மழையால் வழக்கத்தைவிட அதிகமான அளவுக்கு மழை பதிவானது.

வழக்கமாக இந்த கால கட்டத்தில் 41 செ.மீட்டர் மழைபெய்யும். ஆனால் இந்த முறை 68 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

பலத்த மழை காரணமாக சென்னை வெள்ளக் காடானது. இப்போதுதான் மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.

தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் இன்றும் சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். 5 நாட்களுக்கு மழை தொடருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே தென் கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால் 14-ந்தேதி முதல் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை, புதுவை, மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் நாகபட்டினம் இடையே மிக பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகளில் 37 சதவீதம் நீர்நிரம்பி இருக்கிறது.

Leave a comment