பார்சிலோனா: கைது செய்யப்பட்ட கேட்டலோனியா தலைவர்களை விடுவிக்ககோரி பிரம்மாண்ட பேரணி

307 0

ஸ்பெயின் அரசால் கைது செய்யப்பட்ட கேட்டலோனியா தலைவர்களை விடுவிக்ககோரி பார்சிலோனாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஸ்பெயின் நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணம் கேட்டலோனியா. இங்கு தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த மாதம் 1-ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கேட்டலோனியா பிரிந்து செல்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா பாராளுமன்றம் அறிவித்தது.

கேட்டலோனியா சுதந்திர பிரகடனம் செய்த சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தை கலைத்து, நேரடி நிர்வாகம் அமல்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது. கலைக்கப்பட்ட கேட்டலோனியா பாராளுமன்றத்திற்கு டிசம்பர் மாதம் மறு தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் உள்ளிட்ட 5 பேர் மீது ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாத பூட்ஜியமோண்ட் உள்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் சில கேட்டலோனியா ஆதரவு தலைவர்களை ஸ்பெயின் அரசு கைது செய்தது. பின்னர் சிலர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்பெயின் அரசால் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேட்டலோனியா தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பார்சிலோனாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கேட்டலோனியா பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் மாலை சுமார் 4 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். பேரணியில் ஈடுபட்டவர்கள் கேட்டலோனியாவுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர். மேலும் ஸ்பெயின் அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Leave a comment