பாகிஸ்தான்: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்தின் கூட்டாளிகள் விடுதலை

258 0

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்தின் நான்கு கூட்டாளிகளை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவன், ஹபீஸ் சையத். கடந்த 26-11-2008 மும்பையில்  நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் இவன் உத்தரவின்படியே நடத்தப்பட்டது. இவன், இவனுடைய கூட்டாளிகள் அப்துல்லா உபயத், மாலிக் ஜபார் இக்பால், அப்துல் ரகுமான் அபித், ஹாசி காசிப் உசேன். இவர்கள் 4 பேரும் கடந்த ஜனவரி 31-ம் தேதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசால் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் நான்கு பேரும் 90 நாள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த காலம் முடிந்ததை தொடர்ந்து மேலும் 2 முறை அவர்களுக்கு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல் நீடிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் சட்டப்படி பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் காவலில் வைக்கப்படும் ஒருவருக்கு காவல் நீடிப்பு வழங்க நீதித்துறை ஆய்வு கமிட்டியின் அனுமதி பெறுவது அவசியம். ஆனால், 4 பேரின் காவலை நீடிக்க உள்துறை அமைச்சகத்தால் இந்த அனுமதியை பெற முடியவில்லை. இதனால், இவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சையத்தின் காவல் வரும் 26-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment