வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா?

288 0
 

வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா என கேள்விஎழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள பல விடயங்களையும் பட்டியலிட்டார்.

பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“யுத்தம் நிறைவடைந்த பின்னர் யுத்தவெற்றி மமதையுடன் இருந்தவர்கள் தற்போது அதிலிருந்து சற்று இறங்கியிருக்கின்றமையை இந்த வரவுசெலவுத்திட்டம் ஒட்டுமொத்தமாக பாhக்கின்றபோதும் இனக்குழுவொன்றை முடக்கும் வகையிலான நிலைப்பாடுகளே காணப்படுகின்றமையை அவதானிக்ககூடியதாக உள்ளது.

“மொறட்டுவ பகுதியில் கவின்கலைக்கல்லூரியொன்றை நிறுவதற்குரிய முன்மொழிவு வரவு செலவுத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு கவின்கலைக் கல்லூரி கிளிநொச்சியில் இருக்கின்றது. அதில் இராணுவத்தினர் தங்கியிருக்கின்றார்கள். அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றி அந்தக் கல்லூரியை ஏன் இயங்கச் செய்ய முடியாதுள்ளது?

“மாற்றுத் திறனாளிகளுக்கு 2750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாள் புரத்தில் விடுதலைப் புலிகள் மாற்றுத் திறனாளிகளுக்காக நவம் அறிவுக்கூடம் என்ற நிலையத்தினை இயக்கி வந்தார்கள். அதிலும் தற்போது இராணுவத்தினரே தங்கியிருக்கின்றார்கள். அவ்வாறு தங்கியிருக்கும் மாற்றுத் திறனாளிகளை வெளியேற்றி அந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையத்தினை இயங்கச் செய்வதில் அரசாங்கத்திற்கு என்ன பிரச்சினை?

“தமிழ் மக்களுக்கு இரும்புக்கூடுகள் வேண்டாம் என்று நாம் எதிர்த்தோம். அதன் பலனாக 50 ஆயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்து தற்போது வரவு செலவுத் திட்டத்திலும் உள்வாங்கியுள்ளது. இதனை நாம் சாதகமாக பார்க்கின்றபோதும் அதில் வரையொன்றைச் செய்திருக்கின்றது. குறிப்பாக செங்கற்கள், ஓடுகள் மூலம் அந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

“வடக்கு மக்கள் மணல், கற்களைப் பயன்படுத்தி கற்களை அரிந்து வீடு கட்டுவதற்குரிய நிலைமைகள் காணப்படுகின்றபோதும் பொலநறுவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எதற்காக செங்கற்களை பணம் செலவழித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்?

“வடக்கில் 24 கூட்டுறவு சங்கங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 கூட்டுறவு சங்கங்களும் இயங்க முடியாத நிலைமையில் உள்ளன. இந்த கூட்டுறவு சங்கங்கள் இயங்கினால் 2400 இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். ஏன் இதைக் கருத்தில் கொள்ளாதிருக்கின்றீர்கள்?

“வடக்கில் கூட்டுறவுத் துறை மிகுந்த வினைத்திறனுடன் செயற்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசாங்கம் கூட்டுறவு சங்கங்களை சிதைத்து அதற்கு மாறாக ச.தொ.ச. நிறுவனங்களை வியாபித்து வருகின்றன. இவையெல்லாம் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தினை அழுத்தமாக பிரயோகிக்கின்ற செயற்பாடுகளாகவே பார்க்க வேண்டியுள்ளன.

“வடக்கு கூட்டுறவு சமாசம் இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிரமுக வங்கியில் 1999, 2000, 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் 342 இலட்சம் ரூபாக்களை வைப்பிலிட்டது. தற்போது அந்த வங்கிக்கு என்ன நடந்தது என்றே தெரியாதுள்ளது. இதற்கு பொறுப்புக் கூறவேண்டிய மத்திய வங்கி இன்னமும் ஆராய்ந்து பார்ப்பதாகவே கூறுகின்றது. இந்த தொகையாவது இருந்திருந்தால் வடக்கு கூட்டுத்துறவுத் துறைக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்காது.

“பரந்தன் இராசாயனத் தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் மட்பாண்டத் தொழிற்சாலை, காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை, நாவற்குழி தொழிற்சாலை உள்ளிட்ட எவையும் இதுவரையில் இயங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கிழக்கிலும் அதே நிலைமை தான்.  வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இயக்கப்படவில்லை.

“இரணைமடு குளத்தினை தவிர ஏனைய குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. விவசாயப் பண்ணைகளை எடுத்துக்கொண்டால், முழங்காவிலில் உள்ள 1900 ஏக்கர் முந்திரிகை பண்ணை, முக்கொம்பனில் 110ஏக்கர் பண்ணை, வடக்கச்சியில் உள்ள 400 ஏக்கர் பண்ணை, ஜெயபுரத்தில் உள்ள 80 ஏக்கர் பண்ணை, மலையாள் புரத்தில் உள்ள 78 ஏக்கர் பண்ணை, முல்லைத்தீவில் 200 ஏக்கர் பண்ணை, வட்டுவாகலில் 680 ஏக்கர் கோத்தபாய பண்ணை, மன்னாரில் 1910 மற்றும் 1500 ஏக்கர்களைக் கொண்ட இரண்டு பண்ணைகள் என அனைத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

“வடக்கில் பட்டதாரிகள், முன்னாள் போராளிகள், க.பொ.த. சாதாரண, உயர்தரத்துடன் உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். இத்தனை விடயங்களையும் முன்னெடுத்திருந்தால் அவர்கள் தமது ஜீவனோபாயத்தினை மேற்கொள்ளும் வகையிலான வருமானத்தினை பெற்றுக்கொண்டிருப்பர்கள். தற்போது வேலையற்றவர்களாக வீதியிலே நிற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

“2020இல் புகையிலைப் பாவனையைத் தடைசெய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் வடக்கில் ஆயிரக் கணக்கில் உள்ள புகையிலைச் செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அறிவிப்பினால் வடக்கு அரச அதிகாரிகள் தற்போது புகையிலைச் செய்கையாளர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றாகச் சீரழியும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.

“மறுபக்கத்தில் தற்போது கள் இறக்குவதற்கு வரிவதிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதால் அவர்களின் எதிர்காலம் பாதிப்படைந்துள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாது பியர்களுக்கு வரியைக் குறைத்துள்ளது. இது சுதேச தொழிலாளர்களை நசுக்கும் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது” என்றார்.

Leave a comment