ஜெயலலிதா மரணம் விசாரணை: மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்ய குழு

215 0

ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் அது தொடர்பான மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வதற்கும் உயர்மட்ட டாக்டர்கள் குழுவை விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலசமகால் கட்டிடத்தில் விசாரணை கமி‌ஷனுக்காக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்துக்கு கடந்த மாதம் 27-ந்தேதி வருகை தந்த நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணை தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் சொல்ல விரும்புவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை விசாரணை கமி‌ஷனில் கொடுத்து விசாரணையில் ஆஜராகலாம் என்றும் நவம்பர் 22-ந்தேதிக்குள் இது தொடர்பான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து விட வேண்டும் என்று விசாரணை கமி‌ஷன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதையொட்டி 50-க்கும் மேற்பட்டவர்கள் விசாரணை கமி‌ஷனில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் விசாரணையை தொடங்குவதற்கு ஏதுவாக முதற்கட்டமாக 15 பேர்களுக்கு நீதிபதி நோட்டீசு அனுப்பி இருந்தார்.ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் அது தொடர்பான மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வதற்கும் உயர்மட்ட டாக்டர்கள் குழுவை விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளது.

இதில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அனுபவம்மிக்க டாக்டர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை ஆராய்ந்து தேவையான தகவல்களை விசாரணை கமி‌ஷனுக்கு வழங்குவார்கள். இதற்கான முன்னேற்பாடுகளும் இப்போது தொடங்கி உள்ளது.

Leave a comment