மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செல்ல இராணுவம் தடை

441 0

தற்போதுள்ள நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் சென்று மாவீரர்களான தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவத் தடைகளும் அச்சுறுத்தல்களுமே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு நவம்பர் 27 மாவீரர் நாள் அன்றைய தினம் சுடரேற்றி நினைவுகூருவதற்காக தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக 06.11.2017 மாலை 3.00 மணியளவில் சென்ற மாவீரர்களின் உறவினர்களை, தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை அழித்துத் துவம்சம் செய்து மாவீரர்களின் கல்லறைகள் இருந்த இடங்களின் மேல் இராணுவ முகாம் அமைத்துத் தங்கியுள்ள இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்லத்தினுள் சிரமதானம் செய்ய அனுமதிக்காது திருப்பி அனுப்பியுள்ளனர்.

இம்முறை விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் தமது உறவுகளான மாவீரர்களை விதைக்கப்பட்ட கல்லறைகள் அமைந்துள்ள இடங்களில் சுடரேற்றி நினைவு கூரலாம் என்ற எதிர்பார்ப்புடன் அங்கு சென்ற மாவீர்களது உறவினர்களை இராணுவ முகாம் நுளைவாயிலில் தடுப்பமைத்துத் தடுத்த இராணுவத்தினர் அங்கு தமது இராணுவ முகாம் அமைந்துள்ளதாகவும் அதற்குள் எவரும் உள்நுளைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறியதுடன். நீங்கள் இங்கு சிரமதானம் செய்வதாகவிருந்தால் தமது இராணுவ முகாமுக்குப் பொறுப்பான தமது இராணுவக் கொமாண்டரிடம் அனுமதி பெற்ற பின் வருமாறும் கூறியதுடன் தமது இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்குள் யாரும் உட்செல்ல தாம் அனுமதிக்கமாட்டார்கள் எனவும் கூறித் திருப்பியனுப்பினார்கள்.

அவ்விடத்தில் கூடிய இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிக்காகச் சென்றவர்களை புகைப்படக் கருவிகள் மூலம் புகைப்படம் வீடியோ பதிவும் செய்து அச்சுறுத்தும் பாணியிலும் நடந்துகொண்டனர்.

மாவீரர்களது உறவினர்களுடன் கூடச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர், இவ்விடத்தில் பெருமளவான மாவீரர்களை விதைத்த மாவீரர் கல்லறைகள் இருந்தன அதற்கு மேல்தான் நீங்கள் இராணுவ முகாம் அமைத்துத் தங்கியுள்ளீர்கள்.

இம்முறையாவது இந்த மாவீரர்களது உறவுகள் தமது பிள்ளைகளை விதைத்த இடங்களில் சுடரேற்றி தமது பிள்ளைகளை நினைவுகூர அனுமதியுங்கள் எனக் கேட்டபோதிலும் இராணுவ முகாம் வாயிலில் தடை மறிப்புப் போட்டு நின்ற பெருமளவான இராணுவத்தினர் தமது மேலிடத்து அனுமதியின்றி தாம் எவரையும் மாவீரர் துயிலும் இல்லத்தினுள் செல்ல அனுமதிக்க முடியாது எனக் கூறி மறுத்து விட்டனர்.

அதனைத் தொடர்ந்து மேற்படி மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் இணைத்து மாவீரர்களது உறவினர்கள் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலுள்ள கல்லறைகளைத் துவம்சம் செய்து அதற்கு மேல் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள காணியொன்றில் நவம்பர் 27 மாவீரர் நாளன்று சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருவதற்காக பற்றைக் காடுகளை வெட்டி சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் கேள்விப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு நேரடியாகச் சென்று சிரமதானப் பணியில் ஈடுபட்டுள்ள மாவீரர்களது உறவினர்களுடன் கலந்துரையாடி தமது ஆதரவை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே அதிகளவான மாவீரர்களை விதைத்த மாவீரர் கல்லறைகள் காணப்படுகின்றன.

இம்மாவீரர் துயிலும் இல்லத்திலேயே மட்டு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவான மாவீரர்களை விதைத்த கல்லறைகளும் காணப்படுகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்குள் இராணுவத்தினர் புகுந்து இராணுவத்தினரது ஆட்லறி எறிகணைத் தாக்குதல்கள், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், கிபிர் மிக், பயிற்ரர் விமானத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் 2008 ஆம் ஆண்டு நவம்பர்-27 மாவீரர் நாளன்று தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே மட்டு அம்பாறை மாவட்டங்கள் அடங்கலாக பெருமளவான மாவீரர்களது உறவுகள் கலந்துகொண்டு சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்ட மாவீரர்களது கல்லறைகள் அமைந்துள்ள இடங்களில் மாவீரர்களை நினைவுகூர மாவீரர்களது உறவினர்களை அனுமதிக்காது தொடர்ந்தும் மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளமையானது இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையிடம் ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொண்ட நிலைமாறு கால நீதி பொறிமுறையின்படியான இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை இராணுவத்தைப் பயன்படுத்தி மறுத்து வருகின்றமையையே சுட்டிக்காட்டுகின்றதாக மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment