ரஷிய மிருக காட்சி சாலையில் பெண் ஊழியரை புலி தாக்கியது: பார்வையாளர்கள் காப்பாற்றினர்

278 0

ரஷிய மிருக காட்சி சாலையில் உணவளிக்க சென்ற பெண் ஊழியரை புலி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியாவில் கலினிங்க்ராட் என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு புலி, சிங்கம், கரடி உள்ளிட்ட பலவகையான மிருகங்கள் உள்ளன. அவற்றை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெண் ஊழியர் ஒருவர் சைபீரிய புலிக்கு உணவு வழங்க சென்றார். அக்காட்சியை மேலே இருந்து பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். பெண் ஊழியர் உணவு அளிக்க செல்லும்போது அங்கிருந்த ‘தைபன்’ என்ற ஆண்புலியின் கூண்டு திறந்த நிலையில் இருந்தது.

அதை பெண் ஊழியர் கவனிக்கவில்லை. இந்த நிலையில் கூண்டில் இருந்து ஆக்ரோசமாக வெளியேறிய புலி பெண் ஊழியரை கொல்ல அவர்மீது பாய்ந்தது. இதனால் அவர் பயத்தில் அலறினார்.

இக்காட்சியை நேரில் பார்த்த பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கூச்சலிட்ட அவர்கள் புலி மீது கற்களை வீசி தாக்கினார்கள். இருந்தும் பெண் ஊழியரை புலி விடுவதாக இல்லை.

அவரை கடித்து குதறும் மனநிலையில் இருந்தது. உடனே அருகில் இருந்த உணவகத்தில் இருந்த நாற்காலிகளை எடுத்து புலிமீது பார்வையாளர்கள் வீசினர். அதைதொடர்ந்து புலியின் கவனம் வேறு திசையில் திரும்பியது.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பெண் ஊழியர் வேகமாக வெளியேறினார். இதனால் அவர் உயிர் தப்பினார். ஆனால் அவர் பலத்த காயம் அடைந்தார். இச்சம்பவம் நடந்தபோது சக பூங்கா ஊழியர் யாரும் அருகே இல்லை.

எனவே பார்வையாளர்களே ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புலிதாக்கியதில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. அவர் குணமடைய நீண்ட நாள் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

புலி நல்ல மனநிலையில் இல்லை. அதனால்தான் தாக்கிவிட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மிருக காட்சி சாலையின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a comment