புதிதாக பத்து மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படும் !- அஜித் பெரேரா

325 0

புதிதாக பத்து மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் பாரிய குற்றச் செயல்கள் போன்றன தொடர்பில் நீதியை துரித கதியில் நிலைநாட்டுவதற்கு 35 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

தற்போது 75 மேல் நீதிமன்ற நீதிபதிகள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்படும். புதிதாக நீதிபதிகளை நியமிப்பது குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

இந்த யோசனை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.குற்றச் செயல் ஒன்றுக்கான நீதி வழங்கும் பொறிமுறைமைக்கு சுமார் சராசரியாக 17 ஆண்டுகள் தேவைப்படுவதாக தெரியவருகிறது.

நீதவான் நீதிமன்றில் 10 ஆண்டுகள், மேன்முறையீட்டு நீதிமன்றில் 7 ஆண்டுகள் மற்றும் உச்ச நீதிமன்றில் மேலும் சில காலம் என வழக்கு விசாரணை தீர்ப்புகளுக்கு காலம் தேவைப்படுகின்றது.

சில வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு அளிப்பதற்கு 25 ஆண்டுகள் வரை செல்கின்றது.

மேலும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளின் எண்ணிக்கையையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a comment