காரைநகரில் பனம் விதைகள் நடுகை!

415 0
வடமாகாண மரம் நடுகை மாதத்தில்  காரைநகரில் பனம் விதைகள் நடுகை – மழைக்கு மத்தியிலும் களத்தில் உத்தியோகத்தர்கள் .
காரைநகரில்  ‘பனை விதை நடுகைத் திட்டம்’ முன்னெடுக்கப்பட்டது. காரைநகர் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஒரே நாளில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.
வடமாகாண மரம் நடுகை மாதமான கார்த்திகை மாதத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. கடும் மழைக்கு மத்தியிலும் இந்த விதைகள் நடுகைத் திட்டம் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது.
காரைநகர் பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த பனம் விதை நடுகை செயற்பாட்டில் கிராம சேவையாளர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொதுமக்களும்  கலந்துகொண்டனர்.
காரைநகரில் இந்திய வீட்டுத்திட்டம் பெற்றுக்கொண்ட பயனாளிகள் இந்த பனை விதை நடுகையில் அதிகம் பங்கெடுத்தனர்.
பொதுமக்கள் வீடுகளின் கட்டுமானத்திற்காக பல நூற்றுக்கணக்கான பனை மரங்களைத் தறித்துள்ளனர்.
அதனால் பனைகளை மீள்நடுகை செய்யும் செயற்பாடு வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே இன்று அதிகளவான பனை விதைகள் நாட்டப்பட்டுள்ளன. மேற்படி வீட்டுத்திட்டப் பயனாளிகள் அதிகளவான பனை விதைகளைச் சேகரித்திருந்தனர்.
அந்த விதைகள் காரைநகர் தும்பில்பிட்டித் தரவை, ஈழத்துச் சிதம்பரம் ஆலய தீர்த்தக் கரையை அண்டிய கரையோரங்களில் நடுகை செய்யப்பட்டன.
பனை விதை நடுகைத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment