அண்ணன் பிரபாகரன் ஆயுதம் தூக்க சிங்கள ஆட்சியாளர்களே காரணம்! -சாள்ஸ்

2195 0

1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தகுதி இருந்தும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்காத மாணவர்களின் சில ஆலோசனைகளுக்கு அமைவாகவும் மற்றும் தந்தை செல்வநாயகம் அவர்களுடைய கோட்பாட்டுக்கு அமைவாகவும், அண்ணன் பிரபாகரன் இந்த நாட்டில் தனிநாட்டுக் கோரிக்கையைப் பிரகடனப்படுத்தி, ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். அவர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததற்கு அப்போதிருந்த ஆட்சியாளர்களின் சட்டங்களும் தமிழர்கள் மீதிருந்த அடக்குமுறையுமே காரணமாக இருந்தன என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே இதை இவ்வாறு குறிப்பிட்டார். ஆவர் அங்கு மேலும் கூறுகையில்,

‘இந்த நாடு ஓர் ஐக்கிய நாடாக இருக்க வேண்டும் என்பது எனது முதலாவது வேண்டுகோள். அத்தோடு இந்த நாடு மத சார்பற்ற நாடாகவும் இருக்க வேண்டும்.
உதாரணமாக, இலங்கையின் அயல் நாடுகளான இந்தியா, நேபாளம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால், அங்கு ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் அதிகமாக இருந்தாலும் மத சார்பற்ற நாடாகத்தான் அவர்கள் யாப்பை அமைத்து வைத்திருக்கின்றார்கள்.

அதன்மூலம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதனை நாங்கள் எங்கள் கண்முன்னே கண்டுள்ளோம். அந்த வகையில் இந்த நாடு ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரத்தில் தற்போதைய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கள மொழிக்கு முன்னுரிமையும் அதேபோன்று தமிழ் மொழிக்கும் முன்னுரிமை என்ற பதம் இல்லாமல் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரச கரும மொழிகளாக்கப்பட வேண்டும். ஏனென்றால், சிங்களம் அரச கரும மொழியென்று பிரகடனப்படுத்தப்பட்டு, அதற்குப்பின் அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்தில் தமிழும் அரச கரும மொழியாதல் வேண்டுமென சேர்க்கப்பட்டது.
இதன் காரணத்தால்தான் 68 வருடங்களின் பின்பு தமிழில் தேசிய கீதம் பாட வேண்டிய ஒரு சூழ்நிலை வந்ததென்று நான் நினைக்கின்றேன்.

அன்று அந்த யாப்பில் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் அரச கரும மொழியென்று இடம்பெற்றிருந்தால் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு 68 வருடங்கள் தேவையில்லை.

அந்த வகையில் இந்த அரச கரும மொழியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயம். இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ்? சிங்கள மொழிகள் அரச கரும மொழிகள் என்பது வரவிருக்கின்ற புதிய யாப்பில் இடம்பெற வேண்டும். அடுத்து, அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையிலும் சரி, 1987ஆம் ஆண்டு மாகாண சபைகள் சட்டத்திலும் சரி, ‘மாகாணசபை நிர்வாகம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அது ‘மாகாண அரசு’ என்று புதிய யாப்பில் இடம்பெற வேண்டும்.

ஏனென்றால், 3 நிலைகளில் இந்த நாட்டில் தற்பொழுது ஆட்சி முறைகள் இருக்கின்றன. அதாவது, மத்திய அரசாங்கத்தினுடைய ஆட்சி முறை, மாகாண அரசாங்கத்தினுடைய ஆட்சி முறை, உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முறை. அப்படியிருக்கின்றபோது மாகாண சபை நிர்வாகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மாகாண அரசாக இருக்க வேண்டும்.

மேலும், வடக்கு, கிழக்கு ஒரு மாகாணமாக இருக்க வேண்டும். அது தமிழ் பேசும் மக்களுக்குரிய மாகாணம் என்பது புதிய யாப்பில் இடம்பெற வேண்டுமென்று நான் இந்த நேரத்திலே விசேடமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். அத்துடன் மாகாணங்களுக்கு அதியுயர் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் மீளப் பெற முடியாத வகையில் அதற்கான ஏற்பாடுகள் புதிய யாப்பில் இடம்பெற வேண்டும் என்பதையும் இச்சந்தர்ப்பத்திலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

வடக்குக் கிழக்கு மாகாணத்தைத் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணமாகக் கேட்பதற்குத் தமிழர்கள் தகுதியுடையவர்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன் இலங்கையின் வரலாற்றில் நடைபெற்ற ஒரு சில விடயங்களையும் நான் இந்தச் சபைக்குக் கூற விரும்புகின்றேன்.
வடக்குக் கிழக்குப் பிரதேசத்தைத் தமிழ் பேசும் மாநிலமாகக் கேட்பதற்கு எங்களுடைய தமிழ் மக்களுக்கு ஏன் உரிமையிருக்கின்றது? ஏனென்றால் ஆதிகாலத்தில் இந்தத் தீவு ஒரு நாடாக இருக்கவில்லை.

இது பல இராச்சியங்களாக இருந்தது. ஆதிகாலத்தில் கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு என 3 பிரதான இராச்சியங்கள் இருந்தன. அந்த ஒவ்வொரு இராச்சியங்களுக்குக் கீழும் சிற்றரசர்கள் ஆண்டிருக்கின்றார்கள். ஆனால், ஆதிகாலத்தில் இந்த 3 இராச்சியங்களையும் தமிழர்கள் ஆண்டிருக்கின்றார்கள். அதன் பின்பு சிங்கள மன்னர்கள் ஆண்டிருக்கின்றார்கள்.

ஆனால்? அனைத்து இராச்சியங்களையும் தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கின்றார்கள். ஆனால்? அனைத்து இராச்சியங்களையும் சிங்கள மன்னர்கள் ஆண்டதாக வரலாறில்லை. அப்படியான ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டில் தமிழர்கள் தங்களுடைய தாயகப் பகுதியைத் தமிழர்கள் பிரதேசமாகக் கேட்பதற்கு முழுத் தகுதியுடையவர்கள் என்பதையும் நான் இந்தச் சபைக்குக் கூறவிரும்புகின்றேன்.

அந்த இராச்சியங்களுடைய ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 1505ஆம் ஆண்டு வர்த்தக நோக்கமாகப் போர்த்துக்கீச நாட்டிலிருந்து வந்த டொன் லொரேன்கோ டி அல்மேதா என்பவருடைய வருகையுடன் அந்நிய நாடுகளுடைய ஆக்கிரமிப்புக்கு இந்த இராச்சியங்கள் உட்பட ஆரம்பித்தன.

அதாவது அந்நியருடைய ஆதிக்கத்தால் இராச்சியங்கள் முதலில் போத்துக்கேயரிடமும் பின்னர் ஒல்லாந்தரிடமும் இறுதியில் ஆங்கிலேயரிடமும் வீழ்ந்தன. 1815ஆம் ஆண்டு ஆங்கிலேயர் முழு இராச்சியங்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தார்கள். அவ்வாறு கொண்டுவந்த பின்பு 1833ஆம் ஆண்டு ஒரு ஆட்சியின் கீழ் இலங்கையிலிருக்கின்ற அனைத்து இராச்சியங்களையும் கொண்டுவந்தார்கள்.

அவ்வாறு கொண்டுவந்ததன் பின்பு அவர்கள் 1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பை உருவாக்கி 1948ஆம் ஆண்டு இந்த நாட்டிற்குச் சுதந்திரம் கொடுத்து, அதிகாரத்தில் சிங்களவர்களை இருக்கவைத்து அழகுபார்த்தார்கள். அதன் விளைவுதான், அன்று ஆங்கிலேயர் செய்த தவறான முடிவுதான் இன்று நாங்கள் 69 வருடங்களாகத் துன்பங்களை அனுபவித்துவருகின்றோம்.

ஆனால், அந்த சோல்பரி யாப்பில் 29ஆவது அத்தியாயத்தில் சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்ற வகையில் சட்டங்களை இயற்ற முடியாதென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அப்படியான வரைபு இருந்தும்கூட, அப்போது ஆண்ட தலைவர்கள் 1949ஆம் ஆண்டு மலையக மக்களுடைய வாக்குரிமையைப் பறித்தார்கள். 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதன்பின்பு 1971ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய அனுமதி தொடர்பான சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.

ஏற்கனவே 1971 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த நாட்டில் தகுதியுடையவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியும்.

அந்த நேரத்தில் அதிகளவான தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்ற காரணத்தினால், அப்போதிருந்த அரசு சட்ட வரைவு ஒன்றை வரைந்து, தரப்படுத்தல்மூலம் மாவட்ட ரீதியாகப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்வாங்கினார்கள்.

இந்த நாட்டில் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் அதாவது சிங்களத் தலைவர்கள் எங்களுடைய மக்களைக் கல்வியின் மீதான அடக்குமுறையின்மூலம் அடக்கி ஆளுகின்ற ஒரு சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டார்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் பல போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த 1971ஆம் ஆண்டுக்கு முன்பே அதாவது 1957ஆம் ஆண்டு அப்போதிருந்த பிரதமருக்கும் தந்தை செல்வநாயகம் அவர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

அதேபோன்று 1965 ஆம் ஆண்டும் அப்போதிருந்த பிரதமருக்கும் தந்தை செல்வநாயகத்திற்கும் இடையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரவில்லை.

அந்த இரண்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வராததற்கு மிகப் பெரிய காரணமாக இருந்தது, அந்த நேரத்திலிருந்த ஆட்சியாளர்களுடைய ஆதிக்கம் என்றுதான் கூற முடியும். அந்த ஆட்சியாளர்களைக் கொண்டு வந்தவர்கள் பல பேர் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்ற காரணத்தினால், இவை எல்லாம் பேசும் பொருளாகவே போய்விட்டன.

அதற்குப் பிறகு 1972 ஆம் ஆண்டுஇ 1978 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் அந்தந்த அரசியல் யாப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தாலும், தமிழ் மக்கள் தங்களுடைய பிரதேசங்களில் இறைமையாக வாழக்கூடிய விதத்தில் அந்த அரசியல் யாப்புக்கள் அமையவில்லை.

இதன் அடிப்படையில்தான் தந்தை செல்வநாயகம் அவர்கள் ‘இந்த அரசாங்கங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வதில் பயனில்லை. தனிநாடு என்றவொரு கோட்பாட்டுக்குச் சென்றால் மட்டுமே தமிழர்கள் இன அடையாளத்துடன் வாழ முடியும்’ என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தகுதி இருந்தும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்காத மாணவர்களின் சில ஆலோசனைகளுக்கு அமைவாகவும் மற்றும் தந்தை செல்வநாயகம் அவர்களுடைய கோட்பாட்டுக்கு அமைவாகவும், அண்ணன் பிரபாகரன் இந்த நாட்டில் தனிநாட்டுக் கோரிக்கையைப் பிரகடனப்படுத்தி, ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

அவர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததற்கு அப்போதிருந்த ஆட்சியாளர்களின் சட்டங்களும் தமிழர்கள் மீதிருந்த அடக்குமுறையுமே காரணமாக இருந்தன என சிங்கள ஆட்சியாளர்களின் வரலாற்றுக் தவறுகளைப் சுட்டிக்காட்டினார்.

Leave a comment