சார்ஜா புத்தக திருவிழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

31520 3,486

சார்ஜாவில் நடந்து வரும் சர்வதேச புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

சார்ஜாவில் நடந்து வரும் சர்வதேச புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சர்வதேச புத்தக திருவிழா நடைபெறுவது வழக்கம். உலகின் பல நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர். இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் பங்கேற்க தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சார்ஜா அரசு நிர்வாகம், சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தது.

இந்த அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் துபாய் சென்றார். விமான நிலைய வரவேற்புக்கு பிறகு கார் மூலம் சார்ஜாவுக்கு பயணம் ஆனார். அங்கு சர்வதேச புத்தக திருவிழா நடைபெறும் இடத்துக்கு சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டார். அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் வந்திருந்தார்.

புத்தக திருவிழாவில் இடம் பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்டு பிறகு நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக செண்டை மேளத்துடன், மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்தக திருவிழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், சர்வதேச புத்தக வாசிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு தனக்கு அன்பளிப்பாக வந்த ஆயிரம் தமிழ் புத்தகங்களை சார்ஜா புத்தக ஆணையத்துக்கு வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

கடந்த 1982- ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று 36-வது ஆண்டாக நடக்கும் இந்த சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். சார்ஜா ஆட்சியாளர் தமிழர்களுக்கு நெருக்கமானவர். அவருக்கு மலையாள மொழி நன்றாக தெரியும். திராவிட மொழியில் மூத்த மொழியாக தமிழ் உள்ளதால் அதற்கு நெருக்கமானவர் நமக்கும் நெருக்கமானவர்தானே?

அவரை சந்திக்கும்போது அவர் நம்மவர் என்ற உணர்வு ஏற்படுகிறது. தமிழனத்துக்கு நெருக்கமானவர்கள் திராவிட இயக்கத்திற்கும் நெருக்கமானவர்தானே? இங்கு அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு செலவில் நூலகம் ஏற்படுத்தி தந்து வருகிறார் என்ற செய்தியை கேட்டு ஆச்சரியமடைந்தேன்.

அதேபோல தமிழ்நாட்டில் கடந்த 1949-ம் ஆண்டில் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார். ஆனால் அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே 1948-ல் வீட்டில் ஒரு படிப்பகம் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

லண்டனில் இருந்து கெடிகாரம், அமெரிக்காவில் இருந்து செல்போன் வாங்கி வந்தேன் என்பதை கூறுவதை காட்டிலும் சார்ஜாவுக்கு வந்து புத்தகங்கள் வாங்கி வந்தேன் என்று சொல்வது பெருமையளிப்பதாக உள்ளது.திராவிட இயக்கமும் புத்தகமும், உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை போன்றது. திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களில் படிப்பாளிகள் அதிகம். படைப்பாளிகள் அதிகம். வாழ்வில் புத்தகமும் நாமும் கணவன், மனைவி போல இரண்டற கலந்து இருக்க வேண்டும். எழுத்தாளர்கள் இமயம் போல உயர்ந்து இருக்க வேண்டும் என்று கலைஞர் கூறுவார். அதனால் எனது தாயார் தயாளு அம்மாள் மூலமாக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு, வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டியில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.

புத்தகங்களை பற்றி கூறும்போது தென் தமிழகத்தில் வாழ்ந்த இஸ்லாமிய புலவர்கள், தமிழ் அறிஞர்கள் அரபி மொழியில் தமிழ் இலக்கியங்களை படைத்து வெளி உலகிற்கு எடுத்து வந்துள்ளனர். குறிப்பாக தமிழ் மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்த பெருமை காயிதே மில்லத்தை சாரும். இவ்வாறு ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படி அவசியமோ அதேபோல அடுத்தபடியாக புத்தகமும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும்.நான் தி.மு.க செயல் தலைவராக மட்டும் பணியாற்றாமல் தமிழ் மக்களின் உறவாக பணியாற்றி கொண்டுள்ளேன். விரைவில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மலரும். கடந்த தி.மு.க ஆட்சியில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. அது மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்ததும் உருவாக்கப்படும். அதற்கு அந்தந்த வெளிநாட்டிலேயே ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார்கள்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில் சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் அகமது அல் அமெரி, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி மகேஷ், மு.க.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

There are 3,486 comments