ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்த சதி செய்த தீவிரவாத கும்பல் தலைவனுக்கு 22½ ஆண்டு சிறை

4865 0

ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்த சதி செய்த தீவிரவாத கும்பலின் தலைவனுக்கு 22½ ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள அந்த நாட்டின் மத்திய போலீஸ் அலுவலகத்தின் மீதும், அதன் அருகே லித்கவ் என்ற இடத்தில் அமைந்துள்ள சிறை மீதும் தாக்குதல் நடத்த சதி நடந்தது. 2014-ம் ஆண்டு நடந்த இந்த சதியை நியூ சவுத்வேல்ஸ் போலீஸ் படை வெற்றிகரமாக முறியடித்தது.

இந்த சதியில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் தலைவன் சுலைமான் கலீத் (வயது 22) மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் மீது நியூ சவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கோர்ட்டு விசாரணையின்போது சுலைமான் கலீத், ஜிப்ரில் ஆல்மாவோயி (24), 17 வயதான ஒருவர் ஆகிய 3 பேரும் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி செய்ததை ஒப்புக்கொண்டனர்.

முகமது அல்மாவோயி (22), பர்கத் சேட் (25) ஆகிய இருவரும் அவர்களது தாக்குதலுக்கு உதவுவதாக தெரிவித்ததை ஒப்புக்கொண்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்ரி பெல்லி, இந்த தீவிரவாத கும்பலின் தலைவன் சுலைமான் கலீத், தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு 6 வார காலம் பல்வேறு விதங்களில் திட்டம் தீட்டி வந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான, வன்முறையான, வக்கிரமான சித்தாந்தத்தால் உந்தப்பட்டுள்ளதாகவும் கூறியதுடன், இத்தகைய செயல்களுக்கு நாகரிக சமுதாயத்தில் இடம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

முடிவில் அவர் சுலைமான் கலீத்துக்கு 22½ ஆண்டு சிறைத்தண்டனையும், அவரது கூட்டாளிகளான மற்ற 4 பேருக்கு தலா 9 ஆண்டு முதல் 18 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Leave a comment