எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்மிக்க கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு மகிந்த அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுசெயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது அணியைச் சேர்ந்த 42 பேரின் கைச்சாத்துடனான கடிதம் ஒன்று நேற்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், தேசிய அரசாங்கத்தில் இருந்து சுதந்திர கட்சி விலகுதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், அரசியல் யாப்பு உருவாக்கப் பணியில் இருந்து விலகுதல், பிணை முறி விநியோக மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 7 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

