பாலியல் குற்றச்சாட்டு: பிரிட்டன் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜினாமா

2028 0

பிரிட்டனில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாதுகாப்பு துறை மந்திரி மைக்கேல் ஃபாலன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறாக நடந்துகொள்வதாகவும், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரசா மே உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதுகாப்புத்துறை மந்திரி மைக்கேல் ஃபாலனும் ஒருவர். இவர் 2002-ம் ஆண்டு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியின் முழங்காலை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  இதற்காக அவர் சமீபத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார். சில எம்.பி.க்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

இந்நிலையில், மைக்கேல் ஃபாலன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி உள்ளார்.

அதில்,  ‘சமீபகாலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனது கடந்த கால நடத்தை மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் பல குற்றச்சாட்டுக்கள் தவறானவை. ஆனால், ராணுவத்துக்கு தேவையான உயர்ந்த தரநிலைக்கு கீழ் எனது கடந்த கால செயல்பாடு இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். எனவே, என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகும் முதல் எம்.பி. மைக்கேல் ஃபாலன் என்பது  குறிப்பிடத்தக்கது.

Leave a comment