பனாமா கேட் ஊழல் வழக்கு விசாரணைக்காக நாடு திரும்பினார் நவாஸ் ஷெரிப்

3300 0

பனாமா கேட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதால் பாகிஸ்தான் அதிபர் பதவியை இழந்த நவாஸ் ஷெரிப், விசாரணையை எதிர்கொள்வதற்காக நாடு திரும்பினார்.

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் அந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக நவாஸ் ஷெரிப் மகன்களான ஹுசைன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோரும், பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் டர் ஆகியோரும் நவாஸ் ஷெரிப்பின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 12-ம் தேதி நீதிபதி எஜாஸ் அப்சல் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. நவாஸ் ஷெரிப்பை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டதும் இதே அமர்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப், அவரது மகள், மகன்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை 5 நீதிபதிகளை கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நவாஸ் ஷரிப் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் மீதான விசாரணை தொடங்கியது. இருப்பினும் தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாததால் லண்டன் சென்ற அவர் விசாரணைக்கு ஆஜராகமல் இருந்தார்.
எனவே கடந்த 26-ம் தேதி அவர் மீது ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி வழக்கு விசாரணைக்காக இன்று பாகிஸ்தான் திரும்பினார். நாடு திரும்புவதற்கு முன்னர் லண்டன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரிப், “உடல்நலம் சரியில்லாத மனைவியுடன் இருக்கமுடியாமல் போலி வழக்குகளை சந்திக்க பாகிஸ்தான் செல்கிறேன்”, என கூறினார்.
இந்த வழக்கு விசாரணையில் குற்றவாளி என மீண்டும் தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Leave a comment