மின்கசிவு காரணமாக 2 சிறுமிகள் பலியான சம்பவத்திற்கு அரசு பணியாளர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கொடுங்கையூரில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின்கசிவு காரணமாக கொடுங்கையூரில் 2 சிறுமிகள் பலியான சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.அரசு பணிகள் கவனக்குறைவு என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை யார் செய்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகதான் கருத முடியும்.
இந்த துயர சம்பவம் ஏற்பட்டவுடன் முதல்- அமைச்சர் ஆறுதல் தெரிவித்து நிதி உதவி அளித்து அந்த குடும்பத்தை காப்பாற்ற சொல்லி உள்ளார்.எனவே யார் கவனக்குறைவாக இருந்தாலும் அவர்களை தண்டிக்க அரசு தயாராக உள்ளது. அந்த அடிப்படையில் இப்போது அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் வராத அளவுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை ஒரு பாடமாக அமையும்.
சென்னையில் மேலே செல்லும் மின் வயர்களை தரையில் பதிக்கும் (அண்டர் கிரவுண்ட் கேபிள்) பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

பெருமழை பெய்யும் போது தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்குவது வழக்கம். வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகள் மிகவும் தாழ்வான பகுதிகள். மழை பெய்தாலே இங்கு தண்ணீர் நிற்கும்.
ஆனால் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது பாருங்கள் தண்ணீர் வடிந்து விட்டது. எனவே அரசு பணிகள் வேகமாக நடைபெற்றுள்ளது என்பதை இதன் மூலம் கண்டறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

