சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக இருந்து விடுதலை செய்யப்பட்ட நபர், அச்சுறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த மாணவியின் கொலை வழக்கின் ட்ரயல் அட்பார் நீதிமன்ற வழக்கேட்டின் சாட்சிப் பட்டியலில் சாட்சியாக இல்லை என ஊர்காவற்றுறை நீதிமன்று தெரியப்படுத்தியுள்ளது.
குறித்த மாணவியின் கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற வழக்கு நடவடிக்கை முடிவடைந்து வீடு வரும்போது தன்னை தேவையில்லாது கோபி என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்து விட்டதாக கூறி அச்சுறுத்தும் தொனியில் பேசியிருந்தார்.
இது தொடர்பான செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டிருந்ததுடன் சாட்சிகளை அச்சுறுத்தியமை என்ற குற்றச்சாட்டில் இவருக்கு எதிராக ஊர்காவற்றுறை பொலிஸார் பிறிதொரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். இதன்பின்னர் வித்தியா கொலை வழக்கில் இருந்து குறித்த நபர் நிரபராதி என ரயல் அட்பார் நீதிமன்றால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னரும் சாட்சிகளை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.
இவ்வாறான நிலையில் குறித்த வழக்கானது நேற்று முன்தினமும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த சந்தேக நபர் அச்சுறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வித்தியா கொலை வழக்கின் ட்ரயல் அட்பார் நீதிமன்ற குற்றப்பகிர்வு பத்திரத்தின் சாட்சிகள் பட்டியலில் உள்ளாரா என்பது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக அச் சாட்சிகள் பட்டியல் பிரதியானது ட்ரயல் அட்பார் நீதிமன்றிடம் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி குறித்த சாட்சிகள் பட்டியல் பிரதியானது நேற்று முன்தினம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் அச் சாட்சிப் பட்டியலினை ஆராய்ந்த மன்று குறித்த நபர் அச்சுறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியாக இணைக்கப்படவில்லை என மன்று தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து குறித்த நபருக்கு எதிரான வழக்கு விசாரணை அறிக்கையை அடுத்த தவணை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் இவ் வழக்கு விசாரணையை எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்தி வைக்கவும் அதுவரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்கவும் ஊர்கா வற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டிருந்தார்.

