தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பாதித்துள்ளது என்று திருச்சியில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருச்சி வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தமிழ்நாடு, மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத மாநிலமாக உள்ளது என்று கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். தா.பாண்டியன் ஒரு மூத்த தலைவர். அவர் கூறும் கருத்து சரியானது தான்.
தமிழ்நாட்டில் 3 மாதங்களில் பெய்யவேண்டிய மழை சில சமயங்களில் 3 நாட்களில் பெய்து விடுகிறது. ஆனால் அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆறு, ஏரி, குளங்களை தூர்வார எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை. இதனால் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாக பாதித்துள்ளது. மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனை அரசு சரிசெய்யாமல் செயலற்ற அரசாகவே உள்ளது. மக்கள் நலனை பற்றி கவலைப்படாமல் ஆட்சி நீடித்தால் மட்டும் போதும் என்ற மனநிலையுடன் ஆட்சியாளர்கள் உள்ளனர்.

முதல்வர், துணை முதல் வரை மாற்ற வேண்டும் என கவர்னரிடம் 18 எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தார்கள். அப்படி என்றால் மற்ற அமைச்சர்கள் மீது அதிருப்தி இல்லையா என்பது தவறு. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். மக்கள் நலனைப்பற்றி கவலைப்படாத இந்த அரசு ஜெயலலிதா அரசே அல்ல. எனவே விரைவில் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பாமல் ஓய மாட்டோம்.
ஓ.பன்னீர் செல்வம் பதவி இல்லாத போது நடந்து கொண்ட விதத்தால் தான் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஓ.பி.எஸ். தாக்கல் செய்த 1877 ஆவணங்களில் 425 ஆவணங்கள் போலியானவை. எனவே குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக தான் கால அவகாசம் கேட்டுள்ளோம்.
இரட்டை இலை சின்னம் சட்டப்படி எங்களுக்கு தான் கிடைக்கும். இரட்டை இலையை சட்டப்பூர்வமாக பெற நினைக்கிறோம். இதில் ஏற்பட்ட தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. அவர்கள் பொய் சொல்கிறார்கள். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பினர் குறுக்கு வழியில் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சித்து வருகிறார்கள். சட்டப்படி போராடி இரட்டை இலையை நாங்கள் மீட்போம்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

