முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

4882 0

வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் 5 மாவட்ட விவசாய தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையில் போதிய மழை இல்லாததால் கடந்த வருடம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை.

தேனி மாவட்டத்திலும் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியிலும் பெய்த தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

தற்போது அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. எனவே கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு, பிரதான கால்வாயின் பாசன பகுதியில் உள்ள இரு போக பாசன பகுதியில் முதல் போக பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறியதும் மலர் தூவி துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் வழிபட்டனர். தற்போது திறந்து விடப்படும் தண்ணீர் நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பை பொறுத்து திறக்கப்படும்.

இதன் மூலம் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், ஜக்கையன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment