சென்னையில் ஒருநாள் மழையில் 600 பஸ்கள் ஓடவில்லை

279 0

சென்னையில் ஒரு நாள் பெய்த மழையால் 600-க்கும் மேற்பட்ட பஸ்கள் சரியான நேரத்துக்கு எடுக்கப்படாமல் ஓடாமல் நின்றது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது.

இதன் காரணமாக முடிச்சூர், பல்லாவரம், பெரம்பூர், ஓட்டேரி, அண்ணாநகர், அம்பத்தூர் எஸ்டேட் சின்மயா நகர், கொரட்டூர், பட்டரவாக்கம் உள்பட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் அங்கு வசிக்கும் டிரைவர்- கண்டக்டர்கள் அதிகாலையில் உடனே வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

அவர்களை அழைத்து செல்லும் மாநகர பஸ்களும் சரியான நேரத்துக்கு செல்லாததால் டெப்போக்களில் பஸ்களை சரியான நேரத்துக்கு எடுக்க முடியவில்லை.

இதனால் தாம்பரம், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, குரோம்பேட்டை, அயனாவரம், வடபழனி, மந்தைவெளி டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படவில்லை.

3,300 பஸ்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட பஸ்கள் காலையில் ஓடாததால் மக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் பஸ் நிறுத்தங்களில் காத்திருந்தனர்.அப்படியே பஸ் வந்தாலும் பெரும்பாலான பஸ்களில் ஆங்காங்கே மழை நீர் ஒழுகி கொண்டே இருந்தது.

இதுபற்றி அயனாவரம் பஸ் டிரைவர் சேகர் கூறுகையில், எனது வீட்டை சுற்றி மழை நீர் தேங்கியதால் காலையிலேயே டெப்போவுக்கு செல்ல முடியாமல் தவித்ததாகவும், மழை நீர் வடிந்த பிறகே வேலைக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.இதே போல் புறநகர் பகுதியிலும் காலையில் பஸ்கள் இயக்கப்படாததால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

Leave a comment

Your email address will not be published.