​பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா

19576 0

தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு மக்களும் இணைந்து 5 வது தடவையாக நடாத்திய ஸ்ராஸ்பூர்க் மெனுவில் அமைந்துள்ள புனித போல் தேவாலைய மண்டபத்தில் கலைமாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
29.10.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு உயிர் நீத்த அனைவருக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும் அதன் உப கட்டமைப்புகளான பெண்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, மற்றும் ஸ்ராஸ்புக் இளையவர்கள் நடன ஆசிரியர், மற்றும் பெரியவர்கள் ஏற்றி வைத்தனர்.

வரவேற்புரையைத் தொடர்ந்து தமிழ் வரவேற்ப்பு நடனத்தை பாரிசு ஆதிபராசக்தி நடனப்பள்ளி மாணவிகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து மாவீரர் புகழ் பாடுவோம் மற்றும் எழுச்சிப்பாடல்களுக்கான நடனத்தை நடன ஆசிரியர் திருமதி யசோதா நிதாசன் அவர்களின் மாணவர்கள் வழங்கியிருந்தனர். மாவீரர் உரையினை செல்வன் புருசோத்மன் நிதாசன், கரோக்கி மூலமான தாயகப்பாடல்களை திரு. முகுந்தன் துணைவியார் லோயினி மகன் ஆதித்தியன், திரு. குமரசாமி சாந்தன், திரு. விஜயானந்தன் ஆகியோரும் தத்துருபமாக வழங்கியிருந்தனர். தலைமையுரையினை வழங்கிய திருமதி விமலினி அவர்கள் ( இவர் ஓர் காலினை இழந்த முன்னை நாள் போராளி என்பது குறிப்பிடத்தக்கது) தாயகத்தில் மிகுந்த துன்பத்திற்கு மத்தியில் தினமும் உடற்காயங்களால் அவையவங்களை இழந்து வேதனைபட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கும், போராளிகளுக்கும் உதவும் இந்த மனிதநேயச் செயற்பாடு 5 வருடகாலமாக நடைபெற்று வருவதையும், ஆனால் இந்த புனிதமான, அவசியமான வரலாற்று தேவையை செய்வதற்கு தான் படுகின்ற பட்டு வந்த அவமானங்களும், நெருக்கடிகளும், அவச்சொல்லும் தாங்க முடியாத மிகப்பெரும் வலி என்பதையும் இத்தனை வருடங்களாக தன்னுடைய இயலாத நிலையிலும் படியேறி பெறும் சிறிய பங்களிப்பை பரிகசிப்பதையும், பழிசொல்வதையும் கண்ணீரோடு கூறினார்.

இத்தனை வருடகால மனித நேயப்பணிகளின் விபரங்கள் யாவும் பட்டியலிட்டு மண்டபத்தில் ஆண்டு வாரியாக வைக்கப்பட்டிருப்பதையும். நாம் அடுத்து சரியாக வளர்த்தெடுக்க வேண்டிய இளைய தலைமுறையினர் தப்பான பரப்புரைகள், கருத்துக்கள் சொல்லப்பட்டு பொறுப்பற்ற பிழையான வழியிலும், தனிமனித குடும்ப விசுவாசத்திற்குள் வளர்த்துச் செல்லப்படுவது வேதனையளிப்பதாகவும், தான் முயற்ச்சி செய்த இந்தப் பணி 5 வருடமாக நேர்த்தியாகவே சென்றுள்ளது என்றும், அதற்கு கைகொடுத்த ஸ்ராஸ்பூர்க் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த ஆண்டுடன் இந்தப்பணியை நான் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும் இங்கு மனிதநேயம் கொண்ட பலர் இருக்கின்றார்கள் என்று அவர்களின் தொடர்ச்சியான பங்களிப்புடன் நானும் ஓர் பொருளாதாரப் பங்காளிப்பளனாக இணைந்து தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்று மிகுந்த சங்கடத்துடனும் கண்ணீருடன் தனது உரையை உணர்வுகளை தெரிவித்திருந்தார்.

தமிழீழத்தின் புகழ்பாடும் குறவன் குறத்தி நடனத்தையும், விடைகொடு எங்கள் நாடே என்ற பாடல்களுக்கு ஆதிபராசக்தி மாணவர்கள் நடனங்களை வழங்கி கண்களில் கண்ணீரையும் பலத்த பாராட்டுதல்களையும் கரகோசங்களையும் பெற்றிருந்தனர்.

ஐநா மனிதவுரிமைகளில் தமிழினச் செயற்பாட்டாளராகவும், மனிதநேயச்செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்வன் தில்லையம்பலம் தீபராஜ் அவர்கள் உரையாற்றியிருந்தார். ஈழத்தமிழர்களின் உண்மையான விடுதலைப் போராட்டமும் அதனால் ஏற்பட்ட தமிழின அழிப்பும் தற்போதைய அரசியல் நிலை மாற்றங்கள் அதனால் ஐநாவின் மனிதவுரிமைச் செயலகத்தில் இருக்கின்ற நிலைப்பாடுகளும், மாற்றங்கள் பற்றியும் தமிழர் விடுதலைக்காக குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்பவர்களும், கையெழுத்திடுபவர்களும் உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் இங்கு பார்க்கும் போது மிகுந்த வேதனையைத் தருகின்றது என்பதையும் குறிப்பிட்டதோடு, நாளை நம்பிக்கையைத் தரப்போகும் இளையவர்கள் விடுதலை பேசுபவர்களால் தவறாக வழிநடத்தப்படுகின்றார்களோ என்றதொரு அச்சமும் ஏற்படுகின்றது என்பதையும் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான திரு. தயாநிதி அவர்கள் தனிநடிப்பை செய்திருந்தார். பல உறவுகள் தமிழீழ மண்ணில் காணாமல் ஆக்கப்பட்டு பறிகொடுத்து பரிதவிப்பில் வீதியில் நீதி கேட்டு நிற்கும் பாத்திரத்தை கண்முன்னால் கொண்டு வந்து கண்ணீரை வரவழைத்த போதும், அதில் இன்னும் ஒருபடி மேலாகச் சென்று எங்கள் மண்ணில் சிங்களத்தின் தமிழின அழிப்பிலிருந்து மக்களை காப்பாற்றவும் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக ஒரு தேசம் வேண்டும் என்பதற்காக சிங்கள தேசத்தாலேயே ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டு அதில் தங்கள் உடல் உறுப்புக்களையும், அவயவங்களையும் இழந்து எம்மக்கள் எமக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும் எம் தேசமக்களுக்கு உதவும் மிகப்பெரிய மனிதநேயப் பணியை செய்யவிடாது இங்கு முடக்குகின்ற தேசியம் பேசும் சிலரின் செயற்பாடுகள் மிகுந்த கவலையைத் தருகின்றது என்பதையும் மக்களுக்கு கூறியிருந்தார்.

ஆனாலும் இவரின் இந்த உயரிய பணி தொடர்ந்தும் நடைபெறும் அதை இங்குள்ள மக்கள் தொடர்ந்து கைகொடுப்பார்கள் அந்த வாக்கினை சபையில் உள்ள மக்கள் நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது மக்கள் கரகோசத்தின் மூலம் பதிலினை கொடுத்திருந்தனர்.

அவரின் நேரடி நெறியாள்கையில் மூளைச்சலவை என்ற சிறிய நாடகம் நடைபெற்றது. இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ தேசமக்களும் பெற்றோர்களும், அவர்களின் பிள்ளைகளின் நாளாந்த நடைமுறையை நகச்சுவையோடு மக்கள் சிரிக்கும் படியும் அதேநேரத்திலும் சிந்திக்க வைத்து பார்வையாளர்களை பேசவைத்து கரகோசம் தந்து பாராட்ட வைத்ததொரு நிகழ்வாக இது இருந்தது.

மாணவர்களால் புலிகேசி நகச்சுவை நாடகமும் நடைபெற்று வயிறு குலுங்க சிரிக்கவைத்தது. சிறப்புரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக திரு. மேத்தா அவர்கள் உரையாற்றியிருந்தார். வலியும் வாழ்வுமாக தொடரும் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுப்போராட்டத்தில் அவர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சாமாவது நிறைவேற்றும் வகையில் புலம் பெயர்ந்த மக்களிடம் கையேந்தி செய்கின்ற இந்த பணியிலே ஒரு பங்காவது இருக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடு 500 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து எமது கலைக்குழந்தைகளும், கலைஞர்களும் மற்றும் பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் இதில் ஏனைய நாடுகளில் இருந்து வந்து கலந்து கொண்டவர்களையும் ஸ்ராஸ்புர்க் நகரத்திலேயே தனிமனித விசுவாசத்திற்கு அடிபணியாது உள்ளத்திலே உதவும் மனங்களாக கைகொடுக்கும் கரங்களாக உயரிய இந்த மனிநேயப் பண்பிற்கு கைகொடுக்கும் நோக்கத்தோடு வந்து கலந்து கொண்ட மக்களுக்கு கரங்கூப்பிய வணக்கத்தைத் தெரிவித்திருந்தார்.

அதற்கு காரணம் இந்த உயரிய மனிதநேய செயற்பாட்டைச் செய்கின்றவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு கைகொடுக்கவும் வேண்டும் என்ற மன ஆசையே இதற்கு காரணம் என்று கூறினார். ஆனால் அதற்கு மாறாக இங்கு இருக்கின்ற தமிழ்த்தேசியம் விடுதலை பேசுகின்றவர்களின் நிலைப்பாடும் அபகீர்த்தியை உண்டு பண்ணுகின்ற பரப்புரைகளும் மிகுந்த வேதனையைத் தருகின்றது என்பதையும் 70திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றபோதிலும், இந்த மனிதநேய பணிக்கு வந்திருக்கும் மக்களையும் இளையவர்களையும் பார்க்கும் போது சற்று மனநெருடலாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியதோடு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கும், அரசுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஏனைய நாடுகளின் அரசியல் பொருளாதார முடிவுகளை அலசிப்பார்த்து முடிவு செய்யும் முக்கியமாக ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ள இந்த இடம் இங்கு வாழும் மக்களும் அவர்கள் கட்டமைப்புகளும் எவ்வளவு தூரம் முக்கியம் வாய்ந்தது என்பதை நாம் என்று அறிவோம், என்றும் அந்த தமிழர் ஒன்றியங்கள் பொறுப்புடன் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கடமைப்பாடு உண்டு என்பதையும் இந்த செயற்பாடுகளை கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக அவதானித்து வருவதையும் காலத்தின் தேவை கருதி விட்டுக் கொடுப்புடன் உதவிவருவதையும் தெரிவித்திருந்தார்.

இனிவரும் காலங்களில் இந்த நிலைப்பாடுகள் மாற்றமடைய வேண்டும் அதுவே ஒவ்வொருவரும் தாம் இதுவரைகாலமும் ஆற்றிய பணிக்கு கிடைக்கின்ற நற்பெயராகும் என்பதையும் தெரிவித்திருந்தார்.ஸ்ராஸ்புக் தமிழ் ஆர்வலர்களால் புதுவையரின் புதல்விகள் என்ற தலைப்பிலான கவியரங்கமும் நடைபெற்றது. தாயகத்தில் விழுப்புண் அடைந்த மக்களுக்கு உதவுமுகமாக சிற்றுண்டிகளைச் செய்து வழங்கி அதில் கிடைக்கும் சொற்ப பணத்தை ஒன்று சேர்த்தும், நல்லுள்ளங்கள் வழங்கும் உதவியையும் ஒருங்கமைத்து உதவி வருகின்ற மனித நேயச் செயற்பாட்டிற்கு எம்மவர்கள் தமது குடும்பங்களாக வந்து தம்மாலான பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருவதையும் அந்த நிகழ்வில் காணக்கூடியதாக இருந்தது. மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இந்தக்கலைநிகழ்வு இரவு 20.00 மணியளவிலே சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தது.

  

Leave a comment