சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்: 8-வது முறை பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்

221 0

48-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் டெல் போர்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

48-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடர் போட்டிகள் சுவிஸர்லாந்தின் பசேல் நகரில் கடந்த 23-ம் தேதி தொடங்கின. இத்தொடரில் ரோஜர் பெடரர், மரின் சிலிக், டேவிட் கோஃபின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்துகொண்டனர். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சுவிஸர்லாந்தின் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் ஜூவான் மார்டின் டெல் போர்டோவை எதிர்த்து விளையாடினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 7-6 என டெல் போர்டோ கைப்பற்றினார். அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட பெடரர் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். பெடரர் இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டை பெடரர், 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து 6-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இது அவரது 8-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் பட்டமாகும். இதற்கு முன்னதாக கடந்த 2006, 2007, 2008, 2010, 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் பெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் இது பெடரர் வெல்லும் 95-வது ஒற்றையர் பட்டமாகும்.

Leave a comment