போதிய  மழையின்மையால் நெற்செய்கையாளர்கள் பாதிப்பு

388 0
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்கின்ற வறட்சி காரணமாக காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் 60,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில் மழை வீழ்ச்சி இடம் பெறாததன் காரணமாக இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், குடமுருட்டிக்குளம், புதுமுறிப்புக்குளம், கல்மடுக்குளம், கரியாலைநாகபடுவான்குளம் உட்பட அனைத்து குளங்களுக்குமான நீர் வரவு இடம் பெறவில்லை.
அனைத்துக் குளங்களும் வறட்சியான நிலையில் காணப்படுகின்றன.
தற்போதைய காலத்தில் குளங்களின் நீர் மட்டம் பத்தடியினை தாண்டியிருக்கும்.
ஆனால் குளங்களுக்கான நீர் வரவு இடம் பெறக் கூடிய வகையில் மழை வீழ்ச்சி இடம் பெறவில்லை.
மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளும் புழுதி விதைப்பின் மூலம் விதைப்பினை நிறைவு செய்துள்ள நிலையில் மழை வீழ்ச்சி இடம் பெறாததன் காரணமாக பயிர்கள் எரிகின்றன.
பல வயல்களில் விதைக்கப்பட்ட நெல்லுக்கு மழை வீழ்ச்சி இடம் பெறாததன் காரணமாக பயிர் முளைக்காத நிலைமை காணப்படுகின்றது.
கூடுதலான விலையில் விதை நெல்லினைப் பெற்று விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெருக்கடி நிலைமையில் உள்ளனர்.
குறிப்பாக பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் 12,000 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மானாவாரி நெற்செய்கை அழிவடைந்துக் கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மழை வீழ்ச்சி இடம் பெறாவிட்டால் மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை பெரும் அழிவுகளை எதிர்நோக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment