திருச்சியில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

259 0

திருச்சி ஜீ கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. விழாவில் ரூ.772 கோடியில் நலத்திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 30.06.2017 அன்று மதுரையில் தொடங்கிய விழா தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் திருச்சி ஜீ கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை (26-ந்தேதி, வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்தினை திறந்து வைக்கிறார்.

விழாவில் ரூ.212 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.457 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 45 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 32,661 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.

விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்கிறார். திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி நன்றி கூறுகிறார். பிற்பகல் 1 மணியளவில் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி செயற்கை யானைகளுடன் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவு.

விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கு அமைச்சர்கள், எம்.பி.க்கள், கலெக்டர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு செல்கிறார். அங்கு சி.வி.சேகர் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் திருச்சி வரும் அவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

அதேபோல் விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவே திருச்சி வந்தார். தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த அவரும் இன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்கிறார்.

திருச்சியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் ஜீ கார்னர் மைதானம் வரை வழிநெடுகிலும் கொடி, தோரணங்கள், பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வைக்கப்பட்டுள்ள வாழை தோரணங்கள்.

அத்துடன் விழா மைதானம் அருகே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு பிரமாண்ட கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Leave a comment