நித்தியானந்தா தமிழகத்தில் மடாதிபதியாக நினைப்பது தவறு: மதுரை ஆதீனம் கருத்து

276 0

நித்தியானந்தாவுக்கு பெங்களூருவில் ஆசிரமம் இருக்கும் நிலையில் அவர் தமிழகத்தில் மடாதிபதியாக நினைப்பது தவறு என மதுரை ஆதீனம் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்திருந்த மதுரை ஆதீனம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி கூறினேன். அவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. எனவே, தற்போது சந்தித்தேன். இந்த ஆட்சி, மீதமுள்ள ஆண்டுகளை முழுமையாக முடிக்க அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமர் மோடியின் அரசு, தமிழக அரசுக்கு எல்லாவிதத்திலும் ஒத்துழைப்போடு இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் ஒத்துழைப்புடன் இருந்தால்தான் தமிழகத்திற்கு அனைத்து நன்மைகளும் வந்து சேரும். அந்த அடிப்படையில் ஒத்துழைப்புப் பணி இரு அரசிடமும் காணப்படுகிறது.

அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் அரசுத் திட்டங்களும், நன்மைகளும் மக்களுக்கு சென்று சேரும். மதுரை ஆதினத்தின் உடலில் உயிர் இருக்கும் வரை இப்போது நடைபெறும் ஆட்சிக்கே என்னுடைய ஆதரவு.

அரசு கலைக்கப்படும் என்ற சொல்லுக்கே இடமில்லை. நிச்சயமாக மீதியுள்ள ஆண்டுகள் முழுவதும் இந்த ஆட்சி நடக்கும். இந்த ஆட்சி சிறப்பாக நடக்கும் என்று சொல்கிறேனே தவிர, வேறு யார் மீதும் நான் வெறுப்புக் கொள்ளவில்லை. டி.டி.வி.தினகரனாக இருந்தாலும் சரி, எடப்பாடியாக இருந்தாலும் சரி எல்லாருக்கும் எனது ஆசி உண்டு.

நித்தியானந்தாவிற்கு பெங்களூரில் பிடதி ஆசிரமம் உள்ளது. அப்படியிருக்கும் போது தமிழகத்திலே அவருக்கு ஒரு மடத்தை பிடித்துக்கொண்டு மடாதிபதியாக இருக்க நினைப்பது தவறு. இது தேவையில்லாத ஒன்று என்பதே எங்கள் கருத்து.

பிடதி ஆசிரமத்தை வைத்துக்கொண்டு அவருடைய பணிகளை அவர் செய்யவேண்டுமே தவிர, புதிய மடத்தை உருவாக்குவது, மற்ற மடத்திலே நுழைவது என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வரக்கூடாது. அதேபோல் தமிழகத்தில் நித்தியானந்தா தரப்பினர் கோவில் கட்ட முயற்சி செய்வதும் வெற்றிபெறாது.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பார்க்கலாம். எல்லாம் இறைவன் கையில்தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment