அடுத்த ஆண்டு முதல் வாகன விற்பனையை குறைக்க சிங்கப்பூர் முடிவு

239 0

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் மற்ற நாடுகளை விட வாகனங்களை வாங்க அதிக செலவாகும் நாடான சிங்கப்பூரில், தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து, பொது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

சிங்கப்பூரில் வாகனம் வாங்குவோர் முதலில் அதற்கான உரிமத்தை பெற வேண்டும், இந்த உரிமம் பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். உரிமத்தை வாங்க 3700 டாலர்கள் வரை செலவிட வேண்டும்.

இத்துடன் சிங்கப்பூர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிங்கப்பூரின் மொத்த நிலப்பரப்பில் 12 சதவீதம் சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வளர்ந்து வரும் சூழ்நிலையில் அங்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

தினமும் இது அதிகரித்துக் கொண்டே போவதோடு, அங்கு சாலை விரிவாக்கத்துக்கான சாத்தியக்கூறுகளும் குறைவாக இருக்கிறது. இதனால் தனயார் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு நிலவரப்படி 6 லட்சத்துக்கும் அதிகமான தனியார் கார்கள் சிங்கப்பூரில் வலம் வருகின்றன. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகளில் செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் கார் விற்பனையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சிங்கப்பூர் சாலை போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது. கார்கள் தவிர மோட்டார் சைக்கிள்களுக்கும் இது பொருந்தும்.

புதிய நடைமுறையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொது போக்குவரத்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் முடிவு 2020-ம் ஆண்டு வாக்கில் மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment