சென்னை-ஆவடியில் தமிழிசை, எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தை மறியல்: 100 பேர் கைது

263 0

சென்னை மற்றும் ஆவடியில் தமிழிசை, எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மெர்சல் படம் குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை கடுமையாக சாடினார். கட்ட பஞ்சாயத்து செய்து இடத்தை வளைத்து வைத்துள்ளார் என்று கூறியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டாக்டர் தமிழிசை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் நேற்று முன் தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். துணை கமி‌ஷனரை சந்தித்து மனுவும் கொடுக்கப்பட்டது.

நேற்று ஒரு சில இடங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்று 3-வது நாளாக பா.ஜ.க. மற்றும் டாக்டர் தமிழிசை, எச்.ராஜா ஆகியோரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் முன்னணி அமைப்பின் நிர்வாகி கடம்பன் தலைமையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரில் 50 பேர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழிசை உருவ பொம்மையை எரித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 25 நிமிடம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போல ஆவடியில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த கவுதம், கோபி, சித்திக் அலி, ஆதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் தமிழிசை, எச்.ராஜா ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

Leave a comment