சீனாவின் எக்ஸிம் வங்கி 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கடனாக வழங்குவதில் தொடர்ந்து தாமதித்து வருவதன் காரணமாக மத்திய அதிவேக வீதியின் முதலாவது கட்ட பணிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
37.09 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய மேற்படி திட்டம் மீரிகமவிலிருந்து ஏனைய பகுதிகளை இணைக்கிறது.
“எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எம்மால் கடன் பெற முடியாவிட்டால் நாம் வேறு வழிகளைத் நாடவேண்டியிருக்கும்” என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தொடர்பான கடன் பெறப்படுமானால் நிர்மாண பணியைத் துரிதப்படுத்தும் முயற்சியில் இந்தத் திட்டத்தின் செலவினம் அதிகரிக்கப்படமாட்டாது என்ற உடன்படிக்கையை அரசாங்கம் எட்டுவது சாத்தியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்படி கடன் நீண்ட காலமாக தாமதமாகியுள்ளதையும் அதனால் அந்தத் திட்டத்தை முன்னெடுப்பது தாமதத்தை எதிர்கொண்டுள்ளதையும் நெடுஞ்சாலை அமைச்சர் லக் ஷ்மன் கிரியல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.
நாங்கள் இந்த விவகாரத்தை கொழும்பிலுள்ள சீனத் தூதுவரிடம் கொண்டு சென்று இராஜதந்திர வழிமுறையூடாக கடன் வழங்கலைத் துரிதப்படுத்த நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
அந்தத் திட்டத்தின் ஆகக்கூடிய பயன்பாட்டை பெறுவதற்கு அதன் முதற்கட்ட பணி பூர்த்தி செய்யப்படுவது முக்கியமானதாகவுள்ளதாகவும் அந்த அதிவேகப் பாதை மீரிகமவிற்கும் குருநாகலுக்குமிடையிலான அடுத்த கட்ட வீதி நிர்மாணத்துடன் தொடர்பைக் கொண்டது எனவும் லக் ஷ்மன் கிரியல்ல கூறினார்.
அதேசமயம் பிரதமரின் கண்காணிப்பின் கீழுள்ள வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், பிரதமரின் சீனாவுக்கான விஜயத்தின் போது மேற்படி கடன் தொடர்பான பிரச்சினை கவனத்திற்கு முன்வைக்கப்பட்டதாகவும் இந்நிலையில் இந்த விவகாரத்தை கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் முன் மீண்டும் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறினார்.
நிலையான வட்டி வீதத்துடன் 5 வருட கருணைக் காலத்தை உள்ளடக்கி 20 வருட காலத்தில் மீளச் செலுத்தக்கூடியதாகவுள்ள இந்தக் கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் ஆவலுடன் உள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.
அதேசமயம் பிறிதொரு கடனைப் பெறு வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெ டுப்பது மேற்படி திட்டத்தையும் அது தொடர் பான முழு செயற்கிரமத்தையும் தாமதப்ப டுத்துவதாக அமையும் என அவர் கூறினார்.

