மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி உயர்வு

315 0

201608240914070202_Mettur-dam-water-level-rises-5-feet-in-one-week_SECVPFமேட்டூர் அணையின் நீர் மட்டம் 68 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் அணையின் நீர் மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று 9300 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 67.12 அடியாகவும் இருந்தது. இன்று நீர் வரத்து மேலும் அதிகரித்து 9621 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 68.10 அடியாகவும் இருந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விட நீர் வரத்து பல மடங்கு அதிகமாக உள்ளதால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த 15-ந் தேதி 63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 68 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் அணையின் நீர் மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கலில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அந்த கண்கொள்ளா காட்சியை காண சுற்றுலா பயணிகள் அங்கு அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள்.