எம்.ஜி.ஆரை தவிர எந்த நடிகரையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: பண்ருட்டி ராமச்சந்திரன்

339 0

ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்., அவரை தவிர எந்த நடிகரையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

அ.தி.மு.க.வின் 46-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தென் சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.என். ரவி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எம்.ஜி.ஆர். நகரில் நடந்தது.

விழாவில் கழக செய்தி தொடர்பு குழு உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்ட பேசியதாவது:-

சோதனைகளை சாதனைகளாக்கி அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். இரவு பகல் பாராது உழைத்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இந்த இயக்கத்தை வளர்த்தார்கள். எந்த ஒரு இயக்கமும் தனிப்பட்ட குடும்ப சொத்தாக இருக்கக்கூடாது. அப்படி குடும்ப சொத்தாக உள்ளதால் தி.மு.க., வீழ்ச்சியடைந்து வருகிறது. பா.ம.க.வும் அதே வரிசையில் தான் உள்ளது.

இதேபோல் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக் காத்த இந்த இயக்கத்தை சசிகலா தனது குடும்ப சொத்தாக மாற்ற முயற்சித்தால் அந்த குடும்பத்தை ஒதுக்கி விட்டோம். கோபுரத்தில் சில கலசங்களில் ஆட்டம் ஏற்படும். ஆனால் அஸ்திவாரம் பலமாக இருக்கும். அதுபோல அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டர்கள் பலமாக உள்ளதால் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். எப்போதும் ஏழைகளின் வளர்ச்சியையே சிந்தித்து கொண்டிருப்பார். எனவே அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இப்போதுள்ள சில நடிகர் ஏழை மக்கள் பற்றிய சிந்தனைகள் இல்லாமல் அரசியலுக்கு வர துடிப்பதை தமிழகம் ஏற்று கொள்ளாது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த நல்வழியில் இந்த இயக்கம் தமிழக மக்களுக்காக என்றும் பாடுபடும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் ஜெயவர்த்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அசோக், சாமிநாதன், தலைமை கழக பேச்சாளர்கள் முருகுமணி, சிந்தை ஆறுமுகம், கடும்பாடி மலைராஜன், மோகன், ஜெயச்சந்திரன்,காமராஜ், மூர்த்தி, இனியன், குமார், குட்டி, முத்துக்குமார், சௌந்தர்ராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாஸ்கர், அண்ணா மலை நன்றி கூறினர்.

Leave a comment