மு.க.ஸ்டாலினை மக்கள் நம்பத் தயாராக இல்லை: தளவாய்சுந்தரம் பேச்சு

457 0

நமக்கு நாமே என்று எத்தனை முறை நடந்தாலும் மு.க.ஸ்டாலினை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்று நெல்லையில் தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. (எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். அணி) சார்பாக கழக 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடி முனையில் நடந்தது.

கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசியதாவது:-

அ.தி.மு.க. 17.10.1977ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சோதனை உண்டு. அது போல அ.தி.மு.க.வுக்கு 30 ஆண்டுக்கு ஒரு முறை சனி பெயர்ச்சி போல் சோதனை ஏற்படுவதுண்டு. இந்த சோதனை வருகிற டிசம்பர் சனி பெயர்ச்சியில் சரியாகி விடும். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த கட்சியை சிலர் அழிக்க வேண்டும், முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது.

அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்பவர்களை வரலாறு மன்னிக்காது. ஜெயலலிதா ஆன்மா அவர்களை சும்மா விடாது.

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் இந்த இயக்கத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். விரைவில் இந்த கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். ஜெயலலிதா இருக்கும் போது எனக்கு பிறகும் இந்த இயக்கம் நூறாண்டுகள் இருக்கும் என்றார்.

அது போல இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் தொடர்ந்து செயல்படும். தி.மு.க.வுக்கு ஓட்டு கிடைக்காது. கருணாநிதி அரசியல் முடிந்து விட்டது. மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்று ஊரெல்லாம் நடந்து பார்த்தார். மக்கள் கைவிட்டு விட்டார்கள். இப்போது மீண்டும் நடை பயணம் போவதாக அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் எத்தனை முறை நடந்தாலும் அவரை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

வருகிற டிசம்பர் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும். அதில் நமது பலத்தை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment