மரியாதை செலுத்துவதற்காக பயணிகள் விமானத்தில் சாகசம் செய்த விமானிகள் சஸ்பென்ட்

319 0

விமானத்தின் கடைசி தொலைதூர பயணத்தின்போது மரியாதை செலுத்துவதற்காக பறக்கும்போது சாகசம் செய்த இரண்டு ஏர் பெர்லின் விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஏர் பெர்லின் விமான நிறுவனம் திவாலாகி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் 144 விமானங்களில் 81 விமானங்களை லுஃப்தான்சா நிறுவனம் வாங்குகிறது.
இந்நிலையில், ஏர் பெர்லின் நிறுவனத்தின் ஏ330 என்ற பயணிகள் விமானம் கடைசி தொலைதூர பயணமாக  அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து ஜெர்மனியின் டுஸ்ஸெல்டார்ஃப் நகருக்கு வந்துள்ளது. அந்த விமானம் தரையிறங்க அனுமதி கிடைத்ததையடுத்து கீழே வந்த விமானம், இடதுபக்கம் சாய்ந்தவாரே மறுபடியும் உயர பறந்துள்ளது.
இதனால் விமான நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் வானில் பறந்த பிறகு மீண்டும் அந்த விமானம் தரையிறங்கியது. உடனடியாக அந்த விமானத்தில் இருந்தவர்கள் கீழே இறக்கப்பட்டனர். அதன்பின்னர் அந்த விமானத்தின் விமானிகளிடன் அந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அதற்கு அந்த விமானிகள் இது ஏர் பெர்லின் நிறுவனத்தின் கடைசி நீண்ட தூர பயணம் என்பதால் அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக அவ்வாறு செய்தோம் என பதிலளித்துள்ளனர். மேலும் முன்னதாக அவ்வாறு செய்வதற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி கேட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் பதிலை ஏற்றுக்கொள்ளாத ஏர் பெர்லின் நிர்வாகம் அந்த இரு விமானிகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஏர் பெர்லின் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் “விமான சேவையில் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும், இந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது”, என கூறினார்.
இம்மாத இறுதியில் ஏர் பெர்லின் நிறுவனம் குறுகிய தூர பயண சேவைகளையும் நிறுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment