இது சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் – விக்னேஸ்வரன்

293 0

வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும் மதச்சார்பற்ற பகுதிகளாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“போருக்குப் பின்னரே இந்த நாடு சிங்கள பௌத்த நாடு எனும் அபிப்ராயம் கடுமையாக உருவாக்கப்பட்டது. எனினும், வரலாற்றை பிழையாக படித்துவிட்டு இலங்கை ஒரு முழுமையான சிங்கள பௌத்த நாடு என கூறுவதையே காணக்கூடியதாகவுள்ளது.

வடக்கில் ஒருபோதும் பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழவில்லை. ஒரு சிறு தொகையினர் காணப்பட்டனர். தற்பொழுதும் வடக்கில் எஞ்சியிருப்பது அவர்கள் விட்டுச்சென்ற விகாரைகள் மாத்திரமே. எனினும் தற்பொழுது இராணுவத்தினரை பயன்படுத்தி வடக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. பௌத்தர்கள் இல்லாத பகுதிகளிலும் பௌத்தத் விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

வடக்கு மக்கள் மீது புத்த மதத்தை பலவந்தமாக திணிப்பது அவர்களின் உரிமைகளை மீறுவதாகும். அதேபோன்று தற்பொழுது வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான பௌத்தர்கள் பல்வேறு அரசாங்கங்களால் அப்பகுதிகளில் வந்து குடியமர்த்தப்பட்டவர்கள். இதனால் இந்த நாடு முழுமையான பௌத்த அல்லது சிங்கள நாடு என எவரும் தெரிவிப்பாராயின் அதனை நான் நிராகரிப்பதாக” குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் பௌத்த மதத்துக்கு முக்கியத்துவம் வழங்கினாலும், வடக்கு மற்றும் கிழக்கு ஆகியன மதச்சார்பற்ற பகுதிகளாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment