மக்களின் அச்சம் போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை

329 0

ஏறாவூரில் மக்களின் அச்சம் போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்- சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகரிடம் முன்னாள் கிழக்கு முதல்வர் கோரிக்கை

தற்போது  நடக்கின்ற சில சம்பவங்களை பார்க்கின்ற போது  மனிதம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகம்  தோன்றுவதாக  கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

தாயும் மகளும்  கொலை செய்யப்பட்ட சம்பவம்  இடம்பெற்று அதன் வடுக்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்து ஆறாத நிலையில் ஏறாவூரில் மற்றுமொரு இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளமை சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை காட்டி நிற்பதாக கிழக்கின் முன்னாள் முதல்வர் நசீர் அஹமட் குறிப்பிட்டார்

ஏறாவூர்  தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  இதனைக் கூறினார்,

தொடர்ந்து இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்,

ஏறாவூர் சவுக்கடி  பகுதியில் தாயும் மகனும்  வெட்டிக்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்றதும் மிகவும்  அதிர்ச்சியடைந்ததுடன் தீபாவளித் தினமான பண்டிகைத் தினத்தில் இவ்வாறான மனிதாபிமானமற்ற கொடூர குற்றச் செயல்கள் இடம்பெறுவது வேதனையளிக்கின்றது.

தமிழ் மக்கள் தீபாவளியினை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவரும் இன்றைய தினத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால்  குறித்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்,

எனவே இது  தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியகட்சகருக்கு அழைப்பினை  மேற்கொண்டு  மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன்.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகளை  கைது  செய்வதற்கான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் அத்தியகட்சகர் என்னிடம் குறிப்பிட்டார்,

அத்துடன் சவுக்கடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியும் நகர் முழுதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்,

இந்தக் கொலைகள் கொள்ளைக்காக முன்னெடுக்கப்பட்டிருந்தால் நிச்சியமாக மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது.

கடந்த வருடம்  முஸ்லிங்கள் நோன்பு  நோற்றிருந்த ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முந்தைய தினமாம் அரபா தினத்திலேயே  தாயும் மகளும்  கொலை செய்யப்பட்டிருந்தனர் ,அதே போல் இன்று இந்துக்கள் தீயவை  தோற்கடிக்கப்பட்டமையை கொண்டாடும் தீபாவளித் தினத்தில் தாயும் மகனும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

புனித தினங்களிலும்  கொடூர  குற்றச்செயல்களில்  இடம்பெறுமளவுக்கு  சமூகத்தின் நிலைமை மாற்றமடைந்திருப்பதை எண்ணி வேதனையுறுகின்றேன் என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் கூறினார்.

Leave a comment