அண்டார்ட்டிக் பகுதியில் அதிக அளவில் பென்குவின்கள் உயிரிழப்பு

254 0

அண்டார்ட்டிகா பகுதியில் பருவநிலை மாற்றம் மற்றும் பட்டினியால் காரணமாக அடெய்லி இன பென்குவின்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு அண்டார்ட்டிகா பகுதியில் அடெய்லி பென்குவின் இனம் உள்ளது. அதில் சமீபத்தில் மாறி வரும் பருவகால நிலைகளால் அதிக எண்ணிக்கையில் குட்டிகள் இறந்துள்ளன. இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடெய்லி என்று அழைக்கப்படும் அந்த பென்குவின் பெருங்கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறையின் காரணமாக பென்குவின் இறப்பது இது இரண்டாவது முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த இனம் பென்குவின்கள் வசிக்கும் பரப்பில் உணவு இல்லாத காரணத்தினால் குட்டிகளை விட்டுவிட்டு உணவு தேடிச் சென்ற பெற்றோர் பென்குவின்கள் திரும்ப காலதாமதம் ஆனதால் குட்டிகள் இறந்துள்ளதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அண்ட்டார்டிக் பகுதியில் கடல்பறவைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் ராபர்ட் கெளடர்ட் இது தொடர்பாக கூறுகையில், அடெய்லி தொகுப்பில் கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து 18,000 ஜோடிகள் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகின்றன. இதற்கு முன் இதுபோல அதிகபட்ச மரணம் 2013-14 காலகட்டத்தில் ஏற்பட்டது. இது வழக்கத்திற்கு மாறான ஒன்று என்கிறார்.
துருவ கடல் பகுதிகளில் இருக்கும் ஐஸ்கட்டிகள் ஆண்டுதோறும் உருகி வருகின்றன. இதனால் இந்தப் பறவைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இந்த ஆராய்ச்சிக்கு உலக காட்டுயிரிகள் நிறுவனமும் உதவ முன்வந்துள்ளது. பன்னாட்டு அரசுகளின் மாநாட்டை அவசரமாக ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இந்த வாரம் கூட்ட அந்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
அதில் கடல் உயிரினங்களைப் பாதுகாக்க புதிய சட்டங்களை வகுக்க இருக்கிறது. இந்த உயிரினங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான் வேட்டைக்காரர்களிடம் இருந்து மீதம் இருக்கும் பென்குவின்களைக் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் இந்த இனம் விரைவில் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர் கெளடர்ட் தெரிவித்திருக்கிறார்.

Leave a comment