சிங்கள தேசம் எமது சமாதான கரங்களை எட்டி உதைக்குமானால் நாம் தனித்து நிற்க வேண்டிவரும் – சிவமோகம் எம் பி

296 0

சிங்கள தேசம் எமது சமாதான கரங்களை எட்டி உதைக்குமேயானால் நிச்சயமாக நாம் மீண்டெழுந்து மீண்டும் நாம் தனியாக நிற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் என்பது நிதர்சனம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முல்லைத்தீவு சிலாவத்தை இளம்பறவை விளையாட்டு கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைபந்தாட்ட போட்டியில்  சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்,

முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து நாம் மீண்டெழுவோமா என்று நாமே சந்தேகபட்ட காலம் இருந்தது ஆனால் இன்றோ எமது இனம் அதிலிருந்து மீண்டெழுந்திருக்கின்றது. இன்னும் மீண்டு எழும் என்று நான் நம்புகின்றேன். ஒரு புறம் சமாதானமான சூழலில் நாம் வாழ்வதற்காக அரசியல் யாப்பு மாற்றம் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அதில் எமக்கு தேவையான காணி அதிகாரம்,பொலிஸ் அதிகாரம், எமக்கான வடகிழக்கு இணைந்த எமது பூர்வீக பிரதேசம் இவை அனைத்தும் ஒன்றிணைத்து எமக்கு தீர்வாக கிடைக்குமா இல்லையா? என்ற ஒரு இக்கட்டான நிலையில் இன்று நாம் இருந்துகொண்டிருக்கின்றோம். நிச்சயமாக நாம் மீண்டெழுந்து மீண்டும் நாம் தனியாக நிற்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்படுவோம்என்பது நிதர்சனம்.

எந்தவொரு இனமும் தன்னை தக்க வைத்துக்கொள்வதற்காக  எதிர்த்து நிற்கும். அதேபோல் எமது இனமும் அடக்கப்பட்டது அந்த அடக்குமுறைக்காக எதிராக பாரிய யுத்தங்களை புரிந்து எமது மாவீரர்கள் தங்களது இன்னுயிர்களை ஈர்ந்து இன்று இந்த தமிழர்களுக்கான விடுதலையை தமிழர்கள் ஒரு விடுதலையை வேண்டி நிற்கும் இனமாக உலகத்துக்கு அடையாளம் காட்டி நிற்கிறார்கள். அடையாளம் காட்டி சென்றிருக்கிறார்கள். எனவே அவர்களின் இழப்புகள் ஒருநாளும் வீண் போகாது என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment