சாலை விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுங்கள் – மக்களுக்கு அரசு அறிவுரை

252 0

அனைத்து சாலை உபயோகிப்போர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியை” கொண்டாடுங்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சாலை விபத்துகளை குறைக்கவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவும், சாலையை பயன்படுத்துபவர்களின் பொறுப்பான நடத்தைகள் காரணமாகவும், 2016-ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 4 ஆயிரத்து 657 விபத்துகளும் மற்றும் 450 உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.

மேலும் போக்குவரத்து துறையால், செப்டம்பரில் மட்டும் பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள் காரணமாக 31 ஆயிரத்து 189 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் தீபாவளி பண்டிகையின்போது அதிவேகம் மற்றும் கவனக்குறைவு போன்ற காரணங்களால் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உதாரணமாக கடந்த 2016 தீபாவளி பண்டிகையின் போது 818 சாலை விபத்துகள் ஏற்பட்டு அதில் 190 உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த 818 குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளி சோகமயமானது.

இது போன்ற சோக விபத்துகளை தடுக்கும் பொருட்டு அனைத்து சாலை உபயோகிப்போர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment