பட்டாசு விபத்தில் காயமடைவோருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு

419 0

பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

தீபாவளியையொட்டி பட்டாசுகளை வெடிக்கும்போது சில நேரங்களில் கவனக்குறைவு காரணமாக பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன. அதன்மூலம் உடலில் தீக்காயம் ஏற்பட்டு விடுகிறது.

இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சிகிச்சை பிரிவு அமைப்பது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டும் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி ‘டீன்’ வசந்தாமணி நிருபரிடம் கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தீக்காய பிரிவில் ஏற்கனவே 50 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு உள்ளது. இதுதவிர குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பிரிவு தனியாக செயல்படுகிறது. தீபாவளியையொட்டி தற்போது சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இதில் 10 படுக்கைகள் உள்ளன. தீக்காயத்தில் சிக்கும் பெரியவர்களுக்கு ஏற்கனவே உள்ள தீக்காய பிரிவிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் இந்த பிரிவு தீவிர கண்காணிப்பில் செயல்படும். இங்கு முதுநிலை டாக்டர்கள், பொறுப்பு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். இதுதவிர, தீக்காயம் ஏற்பட்டு வரும் நபருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு என தலா 10 படுக்கை வசதிகள் உள்ளன. தேவையான மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

தீக்காயம் ஏற்பட்டவுடன் முதலில் சுத்தமான நீரால் காயத்தை கழுவ வேண்டும். பின்னர், தூய்மையான துணியால் காயத்தை கட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

காயத்தின் மீது மை, மஞ்சள், காபித்தூள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை போடக்கூடாது. இதனால், காயத்தின் தன்மை எப்படி உள்ளது? என்பது தெரியாமல் போய் விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment