தமிழகத்தில் இன்றும், நாளையும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது

4843 0

தமிழகத்தில் இன்றும், நாளையும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறினார்.

சரக்கு மற்றும் சேவை வரியால் (ஜி.எஸ்.டி.) லாரியை வாங்கும்போதும், விற்கும்போதும் இருமுறை வரி செலுத்தவேண்டி உள்ளது. எனவே, ஜி.எஸ்.டி. வரி பதிவை கட்டாயம் ஆக்கக்கூடாது. டீசல் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால், தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவதை தவிர்த்து காலாண்டுக்கு ஒரு விலை என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. எனவே, தமிழகத்தில் இன்றும், நாளையும் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் செயலாளர் தன்ராஜ் கூறியதாவது:-

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்து உள்ள போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் இன்றும், நாளையும் 4½ லட்சம் லாரிகள் இயக்கப்படாது. இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் 1 லட்சம் மணல் லாரிகள் ஓடாது என அறிவித்து உள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. நாமக்கல் நகரை பொறுத்தவரையில் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் லாரிகள் நேற்று முதலே நிறுத்தப்பட்டன.

Leave a comment