பாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கு: 2 போலீஸ் அதிகாரிகளின் தண்டனை நிறுத்திவைப்பு

342 0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் இரண்டு போலீஸ் அதிகாரிகளின் தண்டனையை நிறுத்தி வைத்தும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, ராவல்பிண்டியில் 2007-ம் ஆண்டு, டிசம்பர் 27-ந் தேதி தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியும், குண்டுவெடிப்புகள் நடத்தியும் கொல்லப்பட்டார்.

உலகையே உலுக்கிய இந்த கொலை வழக்கை விசாரித்த ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு தனிக்கோர்ட்டு, தனது தீர்ப்பை ஆகஸ்டு 31-ந் தேதி வழங்கியது. முன்னாள் அதிபர் முஷரப்பை தலைமறைவு குற்றவாளியாக அது அறிவித்தது.

மேலும், சம்பவம் நடந்தபோது, கூடுதல் போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றிய சவுத் அஜிஸ், மூத்த போலீஸ் சூப்பிரண்டாக இருந்த குர்ரம் ஷாஜாத் ஆகியோருக்கு தலா 17 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து அந்த கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருப்பினும் பயங்கரவாத தடுப்பு தனிக்கோர்ட்டின் தண்டனையை எதிர்த்து சவுத் அஜிஸ், குர்ரம் ஷாஜாத் ஆகியோர் தரப்பில் லாகூர் ஐகோர்ட்டின் ராவல்பிண்டி அமர்வில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தாரிக் அப்பாசி, ஹபிபுல்லா அமீர் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.

Leave a comment