மத்திய அமெரிக்க நாடுகளை பந்தாடிய ‘நேட்’ புயலால் 22 பேர் பலி

284 0

மத்திய அமெரிக்க நாடுகளை ‘நேட்’ புயல் பந்தாடியது. இந்த புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய அமெரிக்க நாடுகளான கோஸ்டா ரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் நாடுகளில் ‘நேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள புயல் நேற்று முன்தினம் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக அந்த நாடுகளில் பெரு மழை பெய்தது. எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பல இடங்களில் பெருத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாலங்கள் உடைந்து போயின. பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து பெருத்த சேதம் அடைந்துள்ளன. இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது.

22 பேர் பலி

கோஸ்டா ரிகா நாட்டில் மட்டும் இந்தப் புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். அங்கு 4 லட்சம் பேர் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் தங்கும் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நிகரகுவாவில் 11 பேர் புயலுக்கு பலியாகி உள்ளனர். அங்கு மேலும் 7 பேர் காணாமல் போய் உள்ளனர். வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான முகாம்களில் தங்கி உள்ளதாக அந்த நாட்டின் துணை அதிபர் ரொசாரியோ முரில்லோ கூறினார்.

அங்கு 20 அங்குலம் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக மியாமி அமெரிக்க தேசிய புயல் மையம் கணித்துள்ளது.ஹோண்டுராஸ் நாட்டில் புயல், வெள்ளத்துக்கு 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் இளைஞர்கள் என்றும், அவர்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி விட்டனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. பலர் காணாமல் போய் விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

3 நாடுகளில் சேர்த்து மொத்தம் 22 பேர் பலியாகி உள்ளனர். கோஸ்டா ரிகா நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய சேவை தவிர்த்த பிற சேவைகள் முடங்கின.

மண் சரிவினால், மின்சாரம் துண்டிப்பினால் பல்வேறு நெடுஞ்சாலைகள் அங்கு மூடப்பட்டுள்ளன. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகளும் ரத்தாகி உள்ளன. சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்த ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தேசி பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த ‘நேட்’ புயல் வலுப்பெற்று, ஒன்றாம் எண் புயலாக மாறி, அமெரிக்க வளைகுடா கடலோரப் பகுதியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தாக்கும் என மியாமி அமெரிக்க தேசிய புயல் மையம் கணித்துள்ளது.

இந்த புயலுக்கு தயாராக இருக்குமாறு புளோரிடா முதல் டெக்சாஸ் வரையில் வாழ்கிற மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த புயல் அங்கு தாக்கினால், இந்த ஆண்டு அமெரிக்காவின் தெற்கு கடலோரப் பகுதியில் தாக்கிய 3-வது பெரும் புயல் என்ற பெயரை தட்டிச்செல்லும்.

Leave a comment